உலகக் கோப்பை
சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சூப்பராக விளையாடி பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா வீழ்வது இதுவே முதல்முறையாகும். அடுத்து நடைபெற்ற ஆப்கன் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளிலும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசி எதிர் அணியை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.

அரையிறுதியில் தோல்வி
பாகிஸ்தான் அணியின் இந்த ஃபார்ம் சூப்பர் 12 முழுவதும் தொடர்ந்தது. ஒரு போட்டியிலும் கூட தோற்காத பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை படித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் இதே ஆட்டத்தைப் பாகிஸ்தானால் அரையிறுதி போட்டியில் வெளிப்படுத்த முடியவில்லை. கடைசி நேரத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் வீரர்கள் துவண்டு போனார்கள். இது போட்டியைக் கண்ட அனைவராலும் உணர முடிந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு ஒவ்வொருவரும் ஒவொரு காரணத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பாக். கேப்டன் பாபர் அசாம் டிரஸிங் ரூமில் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட், "டி20 உலகக் கோப்பையில் தோல்வி அடைந்த போதிலும் பாபர் அசாம், சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் பாராட்டுக்குரிய பெருமைப்படக் கூடிய வகையில் செயல்பட்டுள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளது.

எங்கு தோற்றோம்
டிரஸிங் ரூமில் வீரர்களிடம் பேசும் பாபர் அசாம், "முதலில் அணி நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தோல்வியால் துவண்டு கிடக்கிறோம். நாம் எங்குத் தவறு செய்தோம், எங்குச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என அனைவரும் சிந்தித்து வருவது எனக்குத் தெரியும். நமது தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். போட்டியில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதான் நமது தோல்விக்குக் காரணம்.

ஒற்றுமை தேவை
இந்த தோல்வியால் நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்து போய்விடக்கூடாது. இந்த தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றஞ்சாட்டக்கூடாது. இந்த தொடரில் நமக்குக் கிடைத்த பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். நாம் தோற்றுவிட்டோம், பரவாயில்லை. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இதுபோல எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும். நம் ஒற்றுமை உடைந்துவிடக்கூடாது எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே நாளில் நமக்கு இந்த ஒற்றுமை வந்துவிடவில்லை. எனவே, தோல்வி குறித்துக் கவலைப்படாமல், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சிறப்பான அணி
ஒரு கேப்டனாக உங்களிடம் இருந்து எனக்குச் சிறப்பான ஒத்துழைப்பு கிடைத்தது. இங்கு அணியில் நமக்குச் சிறப்பான சூழல் இருந்தது. நாம் ஒரு குடும்பமாகவே இருந்தோம். அனைவரும் தங்களால் முடிந்த உழைப்பை அளித்தீர்கள். இதைத்தான் அனைவரிடமும் எதிர்பார்த்தோம். இந்த முயற்சிதான் நமக்குத் தேவை. முடிவுகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எங்குத் தவறு செய்தோம், எதில் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பழிதீர்க்கும் நேரம் இதுவல்ல
இந்த நேரத்தில்தான் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். பழிதீர்க்கும் நேரம் இதுவல்ல. எந்த வீரரும் அணியால் தனித்துவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. இந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வோம், மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வலி நமக்கு இருக்கத் தான் செய்யும். அதைக் கடந்து வர வேண்டும். வாழ்த்துகள்" என்று பாபர் அசாம் பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











