Asia Cup 2023:கடைசி 22 ஒருநாள் போட்டிகள்.. 6 சதங்கள், 10 அரைசதங்கள்.. பாபர் அசாம்னா கிங்கு தான் போல!
முல்தான்: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடைசி 22 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 10 அரைசதங்கள் விளாசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அண்மை காலங்களில் கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். என்னைவிட சிறந்த வீரராக இருக்கிறார். அவரை தொடர்ந்து கவனித்து வருகிறேன் என்று பாராட்டி இருந்தார். இதனால் சிறந்த வீரர் விராட் கோலியா அல்லது பாபர் அசாமா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நேபாளம் களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 72 பந்துகளில் அரைசதம் விளாசிய பின், அதிரடியை தொடங்கினார். அங்கு தொடங்கிய அதிரடி கடைசி ஓவரில் தான் ஓய்ந்தது. இவரின் அதிரடி ஆட்டத்தால் 129 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். இறுதியாக கடைசி ஓவரில் 131 பந்துகளில் 151 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆசியக் கோப்பையில் 150 ரன்கள் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடைசி 22 ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6 சதங்கள், 10 அரைசதங்களை விளாசி பாபர் அசாம் யாரும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாகவே விராட் கோலி, பாபர் அசாமை பாராட்டியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் கூட ஒருநாள் போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான இன்னிங்ஸை ஆடினார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அபாரமான ஃபார்மில் இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய ரசிகர்கள் பலரும் கிங் பாபர் அசாம் என்று அவரின் ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications