அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 192 ரன்கள் என்று இலக்கை இந்திய அணி 30.3 ஓவரில் எல்லாம் வென்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு திட்டத்தையும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக பேட்டிங் பந்துவீச்சு என அனைத்துமே பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்று இருக்கிறது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசியதை தற்போது பார்க்கலாம். இதில் பேசிய அவர் இந்த ஆட்டத்தில் நாங்கள் நல்லவிதமாக தொடங்கினோம். நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.
இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம். இதனால் நாங்கள் தொடங்கிய விதத்தை சிறப்பாக முடிக்க முடியாமல் தவற விட்டோம். நிச்சயமாக இது எங்களுக்கு நல்லது கிடையாது.
நாங்கள் தொடங்கிய விதத்தை பார்த்தால் நாங்கள் 290 ரன்கள் குவிப்போம் என நினைத்தேன். ஆனால் எங்களுடைய பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் நிர்ணித்த இலக்கை எல்லாம் சரியே கிடையாது. இதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் சொதப்பினோம். புதிய பந்தில் நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரோகித் சர்மா விளையாடுகிற விதம் பிரமிப்பாக இருந்தது. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறலாம் என்று நினைத்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறினார் .பாகிஸ்தான் தற்போது வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுடன் எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.