லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் குடும்பத்தினரை இணையத்தில் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சில ரசிகர்கள் எல்லை மீறி கேப்டன் சல்மான் அலி ஆகாவின் மனைவி மற்றும் மகனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தகாத வார்த்தைகளால் வசைபாடியும் பதிவிட்டுள்ளனர். கேப்டனின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அணியின் மற்ற வீரர்களும் இணையத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த மோசமான செயலுக்கு சல்மான் அலி ஆகாவின் மனைவி சபா மன்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்னையோ அல்லது எங்கள் மகனையோ திட்டுவதாலோ, மிரட்டுவதாலோ பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றுவிடப் போவதில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் சஹிப்சாதா ஃபர்ஹான் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களான பாபர் அசாம் 25 ரன்களும், ஃபக்கர் ஜமான் 25 ரன்களும், ஷதாப் கான் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். லியாம் டாசன் 3 விக்கெட்டுகளையும், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர்.

இந்தப் போட்டி குறித்துப் பேசிய கேப்டன் சல்மான் அலி ஆகா, சஹிப்சாதா ஃபர்ஹானின் பேட்டிங்கை வெகுவாகப் பாராட்டினார். "இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஃபர்ஹான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். ஆனால், மற்ற பேட்டர்கள் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இதுபோன்று பேட்டிங் சரிவுகள் நடப்பது இயல்புதான்" என்று கூறினார்.
மேலும், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியின் செயல்பாட்டையும் அவர் பாராட்டினார். "இன்று ஷாஹீன் சிறப்பாகப் பந்துவீசினார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் வல்லவர், அதை இன்றும் செய்துகாட்டினார். எப்போதெல்லாம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி நாங்கள் தோற்கிறோமோ, அப்போதெல்லாம் அந்த ஒரு குறிப்பிட்ட பேட்டர் தான் காரணமாக இருக்கிறார்.

இங்கிலாந்து பேட்டர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ரன் குவித்து எங்களுக்கு சவால் அளித்தனர். அவர்கள் விளையாடிய விதம் அபாரமானது. உஸ்மான் தாரிக் பந்துவீச்சில் அவர்கள் சிறப்பாக ஆடியபோதும் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்" என்று சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீரர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் அரையிறுதி நிலை என்ன என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.