"இந்தியாவிடம் மட்டும்தான் தோற்றோம் அவங்கதான்.." பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் பேச்சு
இஸ்லாமாபாத்: உலக கிரிக்கெட்டில் இந்திய அணிதான் தற்போதைய சூழலில் மிகச்சிறந்த அணியாக வலம் வருவதாகவும், அவர்களை வீழ்த்த பாகிஸ்தான் மட்டுமல்லாது உலகின் அனைத்து அணிகளும் திணறி வருவதாகவும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெஸன், கடந்த 2025-இல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இதுகுறித்து கிரிக்இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "உண்மை என்னவென்றால், தற்போது இந்திய அணியை வீழ்த்த உலகிலுள்ள அனைத்து அணிகளுமே கடுமையாகப் போராடி வருகின்றன. பாகிஸ்தான் மட்டும் இதில் திணறவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், பாகிஸ்தான் அணியின் தரம் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே மட்டுமே தவறாக மதிப்பிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

அரசியல் காரணங்களால் இரு நாடுகளும் இருதரப்புத் தொடர்களில் விளையாடாத நிலையில், ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதில் 2022 முதல் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2025 ஆசிய கோப்பையில் பெற்ற வெற்றிகளையும், 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் அணியின் முன்னேற்றம் குறித்துப் பேசிய மைக் ஹெஸன், "2023 முதல் 2025 வரை பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், தற்போது எங்களது வெற்றி சதவீதம் 20 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் மட்டுமே தோற்றோம். மற்றபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் வென்றோம். இதனால் எங்களது அணி பலம் வாய்ந்ததாகவே உருவெடுத்துள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications
