Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாகிஸ்தானை விட்டு ஐபிஎல் ஆடப் போறீங்களா?”.. ஒரு வருட தடை விதிக்கப் போவதாக நக்வி அச்சுறுத்தல்

மும்பை: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தொடர்ச்சியாக 2 ஆவது ஆண்டாக பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் தொடர்கள் ஒரே காலகட்டத்தில் நடைபெறவுள்ளன.

இதனால் பல வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் லீக்கை தவிர்த்துவிட்டு இந்தியாவில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அணியின் தசுன் ஷனகா லாகூர் கலந்தர்ஸ் அணியில் இருந்து விலகி, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரணுக்குப் பதிலாக இணைந்துள்ளார். இவர் கடந்த 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 26 ரன்கள் எடுத்திருந்தார்.

Pakistan Cricket Board Chief Mohsin Naqvi Warns Foreign Players Skipping PSL 2026 for IPL

இவருக்கு முன்பாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானியும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக இணைந்துள்ளார்.

ஓராண்டு தடை விதிக்கப்படும்

இது குறித்துப் பேசிய மோஷின் நக்வி, "விதிமுறைகளின்படி இந்த வீரர்கள் மீது நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ், கடைசி நேரத்தில் விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றார். அதற்காக அவருக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதே போன்ற கடுமையான நடவடிக்கை இந்த முறையும் எடுக்கப்படும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "ஐபிஎல் தொடருடன் தேதிகள் மோதுவது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. சில வீரர்கள் அங்கு சென்றாலும், பல தலைசிறந்த வீரர்கள் எங்களுக்கும் ஆட வருகிறார்கள். இந்த ஆண்டின் வேறு எந்த மாதத்திலும் பிஎஸ்எல் தொடரை நடத்த எங்களுக்கு வாய்ப்பில்லை என்பதால் தான் இந்த தேதியை முடிவு செய்தோம்" என்று விளக்கமளித்தார்.

இவர்களைத் தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். பிஎஸ்எல் தொடர் மார்ச் 26 அன்றும், ஐபிஎல் தொடர் மார்ச் 28 அன்றும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 23, 2026, 11:45 [IST]
Other articles published on Mar 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+