ஏன் எங்க கூட கிரிக்கெட் சீரீஸ் ஆட மாட்டேங்கிறீங்க? பஞ்சாயத்துக்கு வரும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் புதிய தலைவராக வந்திருக்கும் எஹ்சான் மானி, இந்தியா, பாகிஸ்தானோடு கிரிக்கெட் தொடரில் ஆட மறுக்கும் விவகாரத்தில் நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா முன்பு 2௦14 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானோடு கிரிக்கெட் தொடரில் ஆட ஒப்புக் கொண்டது. அதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வந்த போது, இடையில் இந்தியா அரசியல் காரணங்களுக்காக அந்த தொடர்களை ரத்து செய்தது.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு ஐசிசி-யில் உள்ளது. அந்த விவகாரத்தை தாங்கள் விடப்போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தற்போது கூறியுள்ளது.

பிசிசிஐ மீது புகார்
இந்தியாவின் தொடருக்கு ஒப்புக்கொண்டு பின்வாங்கிய முடிவை எதிர்த்த பாகிஸ்தான், பிசிசிஐ மீது ஐசிசி அமைப்பில் புகார் செய்தது. மேலும், தங்களுக்கு தொடரை ரத்து செய்ததற்கு இழப்பீடாக 70 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இன்றைய மதிப்பில்) வழங்க வேண்டும் எனவும் கோரியது.

தலைக்கு மேலே போய்விட்டது
இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 1 நடக்க உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் எஹ்சான் மானி கூறுகையில், "இது ஆரம்பகட்டமாக இருந்து இருந்தால் பிசிசிஐ-யோடு அமர்ந்து பேசி இதை முடித்து இருக்கலாம். ஆனால், இந்த விஷயம் ஆரம்பித்து, நிறுத்த முடியாத அளவு நீண்ட தூரம் சென்று விட்டது" என தெரிவித்தார்.

இந்தியாவை புரிஞ்சுக்கவே முடியலை
"இந்தியா எப்போதும் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பாகிஸ்தானோடு ஆட தயாராக இருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகள் ஆடும் தொடர் என்றால் மட்டும் மறுக்கிறார்கள்" என தன் பக்க நியாயத்தை கூறினார் எஹ்சான் மானி.

மானி தலைவரான கதை
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வான உடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த நஜீம் சேத்தி பதவி விலகினார். இம்ரான் கான் உடன் அவரது உறவு சரியாக இல்லை என்பதால் அவர் பதவி விலகினார் என கூறப்பட்டது. அதை தொடர்ந்து எஹ்சான் மானி இம்ரான் கானால் முன்மொழியப்பட்டு, தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த எஹ்சான் மானி?
எஹ்சான் மானி பாகிஸ்தான் சார்பாக ஐசிசி உறுப்பினராக 1996-02 வரை இருந்தார். மேலும், ஐசிசி தலைவராக 2003-06 வரை பதவி வகித்தார். கிரிக்கெட் நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் உடையவர். தற்போது இவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications