இங்கிலாந்துக்கு ஆதரவாக மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்-கிடுக்கிப் பிடியில் 7 பாக். வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் உலகத்தை மேட்ச் பிக்சிங் என்னும் பேய் பிடித்து ஆட்டுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.
3 டெஸ்ட்கள் முடிந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் மேட்ச் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவும் வகையில் மகா மோசமாக ஆடி வருகிறது.
இந்த நிலையில்தான் லண்டனிலிருந்து வெளியாகும் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை ஒரு குண்டைப் போட்டுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெறும் வகையில், இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளது. மஸார் மஜீத் என்பவர் மூலம் நாங்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது தெளிவானது. இதில் கேப்டன் சல்மான் பட், வீரர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் உள்பட 7 பேருக்குத் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது அந்த செய்தி.
இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அது வெளியிட்டது. இந்த தகவல்களை ஸ்காட்லாந்து யார்டுக்கும் அது அனுப்பி வைத்தது.
இதையடுத்து ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் படையினர், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த கையுடன் பாகிஸ்தான் வீரர்களை விசாரிக்க அவர்கள் ஆடை மாற்றும் அறைக்குச் சென்றனர்.
கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முஹம்மது ஆசிப், முஹம்மது ஆமிர் மற்றும் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த கிரிக்கெட் புக்கியான மஸார் மஜீத்தை நியூஸ் ஆப் தி வேர்ல்ட் இதழ் அணுகி இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்ய பிக்சிங் செய்ய வேண்டும் எனக் கோரியது. இதற்காக அவரிடம் 1,50,000 பவுண்டுகளையும் கொடுத்துள்ளது.
போட்டியின்போது ஆமிரும், ஆசிபும் 3 நோ பால்களை வீசியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கும் மஸாருக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகியிருப்பதாக நியூஸ் ஆப் தி வேர்ல்ட் கூறியுள்ளது.
தற்போது மஸாரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒரு வேளை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த புக்கிங்கில் தொடர்பு இருப்பது உறுதியான ஆதாரங்களுடன் தெரிய வருமானால் அவர்கள் கைது செய்யப்படக் கூடு்ம் என்று தெரிகிறது. இருப்பினும் தற்போதைக்கு போட்டி தொடர்ந்து நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. போட்டி முடிந்த பின்னரே பாகிஸ்தான் வீரர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.
இந்த கிரிக்கெட் சூதாட்ட புகாரால், பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications