இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றால் டி20 அணியில் இருந்து தன்னைத் தொடர்ந்து புறக்கணிப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளது, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நடந்து வரும் நிலையில், மூத்த வீரர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, அணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் 'சமா டிவி' வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கிய புதிய மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முகமது ரிஸ்வான் மறுத்துவிட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து டி20 அணியில் தனக்கு ஏன் இடம் வழங்கப்படவில்லை என்பது குறித்து வாரியம் தனக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அவர் சில கூடுதல் கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் அந்தக் கோரிக்கைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவல்களின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கிய மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே வீரர் முகமது ரிஸ்வான் மட்டுமே. முன்னதாக, நட்சத்திர வீரர் பாபர் அசாம் இதே போன்ற ஒரு சூழலை எதிர்கொண்டாலும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்காக மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால், ரிஸ்வான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சமீபத்தில் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரிஸ்வானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான எந்த ஒரு காரணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடவில்லை. வெள்ளைப்பந்துப் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மற்றும் தேர்வுக் குழுவினருக்கு இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது.
முகமது ரிஸ்வானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கும் முடிவு, பயிற்சியாளர் ஹெஸ்ஸனின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் மட்டத்தில் இருந்தும் அந்த முடிவுக்கு ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தானின் புதிய மத்திய ஒப்பந்தத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் பட்டியலில் ரிஸ்வானின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு எந்த ஒரு வீரருக்கும் 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தை வழங்க வேண்டாம் என்று பிசிபி முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் டி20 அணியில் புறக்கணிப்பு, மறுபுறம் ஒருநாள் கேப்டன் பதவி பறிப்பு என அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ள முகமது ரிஸ்வான், தற்போது மத்திய ஒப்பந்தத்தையே நிராகரித்து வாரியத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.