கங்குலி சட்டையை கழற்றி வீசிய லார்ட்ஸ் மைதானத்தில், பாக். கிரிக்கெட் வீரர்கள் அடித்த கூத்தை பாருங்க
லண்டன்: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. முதல் டெஸ்ட் போட்டி, கிரிக்கெட்டின் மெக்கா என புகழப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 339 ரன்களும், அதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 272 ரன்களும் எடுத்து ஆல்-அவுட் ஆகின.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 154 பந்துகளில் சதம் விளாசினார் (அடித்த மொத்த ரன் 114). 1934ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 45 வயதான, இங்கிலாந்து வீரர் பேட்சி ஹென்ட்ரன் சதம் அடித்தார். இப்போது மிஸ்பா தனது 42 வயதில் சதம் அடித்து பேட்சிக்கு அடுத்தபடியாக அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

வோக்கர்ஸ் அபாரம்
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்கர்ஸ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் கேப்டன் அலைஸ்டர் குக் அதிகபட்சமாக 81 ரன்களும், ஜோ ரூட் 48 ரன்களும் எடுத்தனர். பாக். சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

215க்கு ஆல்-அவுட்
67 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஆசத் ஷஃபிக் 49 ரன்களும், சர்ஃப்ராஸ் அஹ்மது 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்கர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

282 ரன் இலக்கு
இதனால், இங்கிலாந்து அணி வெற்றிக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ஜானி பைர்ஸ்டோ 48 ரன்களும், கேரி பேலன்ஸ் 43 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

யாஷிர் ஷா சாதனை
முதல் இன்னிங்சை போலவே, சிறப்பாக செயல்பட்ட பாக். பவுலர் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி லார்ட்ஸ் மைதானத்தில் 2 இன்னிங்சுகளிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய நாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இதுவே இவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாகும்.

பாகிஸ்தான் முன்னிலை
இதனால், இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில், 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாஷிர் ஷா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை முன்னணி வகிக்க விட்டதுதான் நாங்கள் செய்த தவறு என இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்தார்.
ராணுவ சல்யூட்
இதனிடையே போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது செய்த செயல் தற்போது வைரலாகியுள்ளது. மூத்த வீரர் யூனிஸ்கான் கட்டளையிட, பாக். கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களை போல சல்யூட் மரியாதை வைத்தனர். இதை ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.

சட்டையை கழற்றியவர் கங்குலி
இதே லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வெட்ஸ் ஒருநாள் போட்டித்தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தின் இமாலய இலக்கை விரட்டி சென்று இந்தியா வெற்றி பெற்றபோது, கேப்டன் கங்குலி தனது சட்டையை கழற்றி சுற்றிய போட்டோ வைரலாகியிருந்தது. இப்போது பாகிஸ்தானின் ராணுவ சல்யூட் வீடியோவும் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications