பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்… கிரிக்கெட் உலகம் இரங்கல்
Recommended Video
வாஷிங்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்று நோயால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன், ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் பாத்திமா. புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புற்றுநோயின் 4ம் கட்டம் என்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நூர் பாத்திமா மரணம் அடைந்தார். இந்த தகவலை ஆசிப் அலி விளையாடி வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யூனைடெட் அணி வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஆசிப் அலியின் 2 வயது மகள் காலமாகியுள்ளதற்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். ஆசிப்பிற்காகவும், அவரின் குடும்பத்துக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். வலிமைக்கும் தைரியத்துக்கும் முன் உதாரணம் ஆசிப். மனவலிமை, மன உறுதியுள்ள அவர் நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்து தொடருக்கு புறப்பபடும் தருணத்தில், தமது மகளின் நிலை குறித்து ஆசிப் அலி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது மகள், ஸ்டேஜ் 4 புற்று நோயுடன் போராடி வருகிறார். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறோம். ஒரு மணி நேரத்தில் விசா ஏற்பாடு செய்து கொடுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை பாகிஸ்தானுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள அலி, 31.09 சராசரியில் 342 ரன்களை குவித்துள்ளார். வரும் 30ம் தேதி தொடங்கும் உலக கோப்பை அணியில் ஆசிப் அலி இடம் பெறவில்லை. ஆனால், தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications