மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலே வெளியேறி இருப்பது அந்த நாட்டு ரசிகர்களை கடுப்படையை செய்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷ் ரவுபை கிண்டல் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் கடுப்பான ஹரிஷ் ரவுப் அந்த ரசிகரை அடிக்க முயன்றார். அப்போது அவருடைய மனைவி மற்றும் அங்கிருந்த பலர் ஹரிஷ் ரவுபை தடுத்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் அந்த ரசிகர் இந்தியர் என்று நினைத்து தான் ஹரிஷ் ரவுப் அடிக்க நினைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த வீடியோவில் ஹரிஷ் ரவுப் என்ன பேசினார் என்று தெளிவாக கேட்காத நிலையில் பலரும் நீ இந்தியர்தானே என்று அவர் வீடியோவில் பேசியதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியர் என்பதால் தான் அவர் அடிக்க முயன்றாரா என்று கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.
மேலும் அந்த ரசிகர் பாகிஸ்தானை சேர்ந்தவர்தான் என்றும் அருகில் இருந்த நண்பர் பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்திருந்தார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது ஹரிஷ் ரவுப் விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து நான் சமூக வலைத்தளத்தில் எதையும் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் இது குறித்து விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன். ஒரு பிரபலம் என்ற முறையில் நாங்கள் அனைத்து விதமான விமர்சனங்களையும் பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம்.
அதேபோல் எங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு.அதே சமயம் விமர்சனம் என்ற பெயரில் எங்களின் பெற்றோர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை அநாகரிகமாக விமர்சிக்கும் போது அதை தட்டிக் கேட்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். யாராக இருந்தாலும் குடும்பத்தினருக்கும் பெற்றோர்களுக்கும் மதிப்பு வழங்க வேண்டும் என்று ஹரிஸ் ரவுப் கூறியிருக்கிறார்.