மும்பை : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் இழந்த பெருமையை மீட்க அந்த அணி போராடி வருகிறது. எதற்காக ஓய்வு நேரத்தில் கூட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்களது உடல் தகுதியை தீவிரப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷான் மசூத் இருக்கிறார். இந்த தொடருக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலே தோல்வியை தழுவியதற்கு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தான் காரணமா என்று அவர் கேட்டார். இதற்கு பதில் அளித்த ஷான் மசூத், நீங்கள் மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி கேள்வியை கேட்டதற்கு பின்னணி என்ன என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
ஆனால் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் மேட்ச் பிக்ஸிங் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. எங்கள் அணியின் நம்பகத்தன்மையை யாராலும் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் அனைவரும் நாட்டுக்காக உழைத்து வருவதால் இப்படி ஒரு குற்றச்சாட்டை நான் கொஞ்சம் கூட ஏற்க மாட்டேன். இரண்டாவது விஷயம் தற்போது டி20 உலக கோப்பை முடிந்து விட்டது.
முடிந்ததை குறித்து யோசித்து எந்த பலனும் இல்லை. அடுத்தது என்ன நடக்கிறது என்பதை பார்த்து அதை நோக்கி நாம் செல்ல வேண்டும். நான் உங்கள் அனைவருக்கும் ஒரு வாக்குறுதியை தருகின்றேன். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.
ஆனால் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் ஒரு அங்கம். தோல்வி தழுவும் போது நாங்கள் எவ்வளவு வருத்தப்படுவோம் என்று உங்களுக்கு தெரியாது. நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை எப்படி அணுகப் போகிறோம் என்ற யுத்தியை மாற்றப் போகிறோம். பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தரும் வகையில் கிரிக்கெட் போட்டிகளில் இனி நாங்கள் விளையாட போகிறோம்.
பாகிஸ்தான் ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வர வைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்று ஷான் மசூத் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமை பாராட்டிய சான் மசூத், பாகிஸ்தானுக்கு புதிய ஹீரோ கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.