இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தின் முன்னாள் கணவர் உமைர் ஜாஸ்வால் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், அந்நாட்டின் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்திருப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. 41 வயதாகும் சோயிப் மாலிக் 3வது முறையாக திருமணம் செய்துள்ளார். 2002ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக்கி என்பவரை திருமணம் செய்த சோயிப் மாலிக், 2010ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார்.

இதன் பின் அவரை விவாகரத்து செய்த சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். இந்த விவகாரம் சோயிப் மாலிக்கின் 3வது திருமணம் மூலமாக வெளி வந்துள்ளது.
சானியா மிர்சா விவாகரத்திற்கு சோயிப் மாலிக்கின் திருமணம் மீறிய உறவே காரணமாக கூறப்பட்டு வருகிறது. அவரின் செயல்பாடுகளை மாற்றுவார் என்று நீண்ட ஆண்டுகளாகவே சானியா மிர்சா பொறுத்து பார்த்து வந்ததாகவும், ஆனால் நம்பிக்கை இழந்த பின் பிரியும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சானியா மிர்சாவுன் திருமண உறவில் இருந்த போது, நடிகை சனா ஜாவித்தை சோயிப் மாலிக் சந்தித்துள்ளார். அதேபோல் சனா ஜாவித் ஏற்கனவே பாகிஸ்தான் நடிகரும், இசையமைப்பாளருமான உமைர் ஜாஸ்வால் என்பவருடன் திருமண உறவில் இருந்துள்ளார். 2020ஆம் ஆண்டு சனா ஜாவித் - உமைர் ஜாஸ்வால் உறவு முறிந்துள்ளது.
தற்போது சனா ஜாவித் மற்றும் உமைர் ஜாஸ்வால் இருவருக்குமே சோயிப் மாலிக் நண்பராக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனா ஜாவித் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய போது, அவரின் கணவரான உமைர் ஜாஸ்வாலையும் டேக் செய்துள்ளார். கடந்த ஆண்டு வரை உமைர் ஜாஸ்வாலுடன் மாலிக் நட்பு பாராட்டி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து நண்பனுக்கு துரோகம் செய்ததாக சோயிப் மாலிக்கை பாகிஸ்தான் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்.