இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் ரசிகர்.. ஏன் என்ன காரணம்?
துபாய் : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் இன்று மோத உள்ளன. பாகிஸ்தான் தன் குரூப் சுற்று தோல்விக்கு பழி தீர்க்குமா? அல்லது இந்தியா இன்னொரு முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்துமா? என்ற ஆவல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் குரூப் சுற்று போட்டியில் மோதிய போது ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்திய தேசிய கீதத்தை பாடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
அவர் யார்? எதற்காக இந்திய தேசிய கீதத்தை பாடினார்? என்பதையும், இன்று நடக்கும் போட்டியில் புதிதாக ஒன்று செய்ய உள்ளதாக கூறியுள்ளார். அது என்ன என்பதையும் பார்க்கலாம்.
தேசிய கீதத்தை பாடியவர்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அதில் தாஜ் என்ற கிரிக்கெட் ரசிகர், இந்தியா, பாகிஸ்தான் ஆடிய குரூப் சுற்று போட்டியில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது, இரண்டு நாடுகளின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, தன் கழுத்தில் பாகிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கீதத்தை பாடினார் அதில் தாஜ்.

ஏன் பாடினார்?
முதலில் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கபட்ட போது, இந்திய ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார்கள். அதைக் கண்ட தாஜ், அடுத்து இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது, எழுந்து நின்று தானும் பாடி உள்ளார்.

தாஜ் சொன்ன காரணம்
இது பற்றி கேட்ட போது, அதில் தாஜ், "இது அமைதிக்கான ஒரு சிறிய முயற்சி" என கூறினார். அடுத்து, இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றில் தான் இரண்டு நாடுகளின் தேசிய கொடியை ஏந்தி வரப்போவதாக கூறியுள்ளார்.

அமைதிக்கு பாலமாகும் விளையாட்டு
விளையாட்டுப் போட்டிகள் அமைதிக்கு வழி வகுக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. சாதாரண மக்கள் என்றுமே அமைதியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதற்கு அதில் தாஜ் ஒரு உதாரணம். சமீபத்தில் கூட வடகொரியா, தென் கொரியா தங்கள் பல்லாண்டு பகையை மறந்து அணி சேர முயற்சிக்கையில் அதன் ஒரு பகுதியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைந்து பங்கேற்றன. தற்போது கூட 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இணைந்து விண்ணபிக்க உள்ளன என்ற செய்திகள் வந்துள்ளன.


Click it and Unblock the Notifications