ஐதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் மோசமான பில்டிங் செய்ததால் வேகபந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி கடுப்பானார்.பொதுவாக பாகிஸ்தான் அணி பில்டிங் செய்கிறது என்றால் அன்று எப்படியாவது ஒரு காமெடியாவது நடந்து விடும்.
கேட்சிங் மிஸ் செய்வது, நீ பிடிக்கிறாய் என்று நானும், நான் பிடிக்கிறாய் என்று நீயும் ,கடைசியில் இருவருமே பிடிக்காமல் விடுவதும், ரன் அவுட்டை மிஸ் செய்வது என பல சம்பவங்கள் நடைபெறும்.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் அவர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான அணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நான் வேகமாக வந்து வந்து வீசுகிறேன் நீ அதை அடித்து விடு என்பது போல் தான் போட்டி நடைபெற்றது. மேலும் பாகிஸ்தான அணி இன்றைய ஆட்டத்திலும் பல பில்டிங் வாய்ப்பை தவறவிட்டது. குறிப்பாக இலங்கை வீரர்கள் அதிக டபுள்ஸ் எடுத்து நெருக்கடி இல்லாமல் விளையாடினார்கள். இதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்களின் பில்டிங் சொதப்பல்தான்.
இந்த நிலையில் ஆட்டத்தின் 49 வது ஓவரில் ஷாகின் ஆப்ரிடி வீசிய பந்தை இலங்கை வீரர் தீக்சனா அடித்தார். அந்த பந்தை பாகிஸ்தான் பில்டர்கள் தடுக்க தவறினர். மேலும் விக்கெட் கீப்பர் இடம் சரியாக பந்தை எறியாமல் தூரமாக எறிந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி எளிதில் ரன் சேர்த்தது. இதனால் கடுப்பான ஷாகின் அப்ரிடி தவறாக பந்து வீசிய ஃபில்டரை பார்த்து முறைத்தார்.மேலும் உங்களெல்லாம் வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது என்பது போல் ஒரு லுக் விட்டுக் கொண்டு மீண்டும் பந்து வீச சென்றார்.
இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி 9 ஓவர் மட்டுமே வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு விக்கெட் மட்டுமே விழுந்தது. இதைப் போன்று மற்றொரு பந்துவீச்சாளரான ஹரிஷ் ரவுப் 10 ஓவரில் 64 ரன்களும், ஹசன் அலி பத்து ஓவரில் 71 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். எனினும் ஹசன் அலி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பாகிஸ்தான் பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் தடுமாறி வருவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.