Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை வீரர்களை கார்னர் செய்த பாகிஸ்தான் ராணுவ தளபதி.. நக்வி அழுத்தம்.. ஒப்புக்கொண்டது எப்படி?

ராவல்பிண்டி: இஸ்லாமாபாத்தில் நடந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் பயம் காரணமாக, நாடு திரும்ப முடிவெடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களை, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் நேரடியாகத் தலையிட்டுப் பேசிச் சம்மதிக்க வைத்துள்ளார். இந்த தகவலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், நாட்டின் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளார். முதலில் மோஷின் நக்வி சில கண்துடைப்பு வேலைகளில் ஈடுபட்டார். அதன் பின் பாகிஸ்தான் இராணுவத் தளபதியையும் களமிறக்கி விட்டுள்ளனர்.

இலங்கை வீரர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்திற்கு, இலங்கை தூதர் மற்றும் மாநில அமைச்சருடன் நேரில் சென்ற அவர், பாதுகாப்பு ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த அவர், அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஏற்பாடுகளைக் கண்டு இலங்கை தூதர் முழு திருப்தி தெரிவித்தார்.

Pakistan field marshal Aasim Munir Intervenes Sri Lankan Players to Continue Tour Mohsin Naqvi Confirms

அதனைத் தொடர்ந்து, மோஷின் நக்வி இலங்கை அணி வீரர்கள் அனைவரையும் சந்தித்து, சுற்றுப்பயணத்தைத் தொடர ஒப்புக்கொண்டதற்காக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார். அப்போது வீரர்களிடம் பேசிய அவர், "உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு" என்று உறுதியளித்தார். மேலும், "இலங்கை அணியின் இந்த முடிவு, பயங்கரவாதத்திற்கு கிடைத்த தோல்வி, அமைதிக்கு கிடைத்த வெற்றி" என்றும் அவர் பாராட்டினார்.

ஆனால், உள்ளூர இலங்கை வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகவும், பலரும் இலங்கை திரும்ப விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அந்த எண்ணத்தில் இருந்து அவர்களை தடுத்து, இலங்கை கிரிக்கெட் அமைப்பால் மிரட்டல் தொனியில் அறிக்கை விட வைத்ததில் பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கும் பங்கு இருக்கிறது.

இஸ்லாமாபாத்தில் 12 பேர் உயிரிழந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, இலங்கை அணியில் இருந்த 16 வீரர்களில் குறைந்தது 8 பேர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால், இந்த ஒருநாள் தொடரே ரத்தாகும் நிலைக்குச் சென்றது. இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களை எச்சரித்தாலும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மோஷின் நக்வி பேசுகையில், "நிலைமை மோசமானபோது, நம்முடைய ஃபீல்ட் மார்ஷல் அவர்களே, இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசினார். வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அவர்களைச் சம்மதிக்க வைத்தார்" என்று தெரிவித்தார்.

மேலும், "குண்டுவெடிப்புக்குப் பிறகு இலங்கை அணி நாடு திரும்பவே முடிவு செய்திருந்தது. ஆனால், நாங்கள் அந்த நாட்டு வாரியம், வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி, அவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களை இங்கேயே தங்கச் சம்மதிக்க வைத்தோம். அவர்கள் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்றும் நக்வி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்த உயர்மட்டத் தலையீட்டிற்குப் பிறகே, இலங்கை வீரர்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளனர். இலங்கை வீரர்கள் எந்த அளவுக்கு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது அவர்களாக சொன்னால் தான் தெரிய வரும். தற்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் தலா ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மற்றும் நவம்பர் 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

Story first published: Friday, November 14, 2025, 7:35 [IST]
Other articles published on Nov 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+