டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. இந்த தோல்வியின் விரக்தியில் இருக்கும் பாகிஸ்தான் அணி நிர்வாகம், தற்போது அம்பயரின் சர்ச்சைக்குரிய முடிவுக்கு எதிராக மேட்ச் ரெப்ரீ நியாமூர் ரஷீத்திடம் அதிகாரப்பூர்வ புகாரை அளித்துள்ளது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் ரிஷாத் ஹொசைன் வீசிய பந்தை ஷாஹீன் அப்ரிடி எதிர்கொண்டார். பந்து லெக் திசையில் சென்றதால், கள நடுவரான குமார் தர்மசேனா அதனை வைடு என்று அறிவித்தார். ஆனால், சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு வங்கதேச அணி எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்டது. பந்து உடலிலோ அல்லது காலிலோ படாத நிலையில் இந்த ரிவ்யூ கேட்கப்பட்டது. அதாவது வைடு முடிவை நேரடியாக ரிவ்யூ செய்ய முடியாது என்பதால் எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்கப்பட்டது.

மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ரீப்ளே ஒளிபரப்பப்பட்ட பின்னரே வங்கதேச அணி இந்த ரிவ்யூவை கேட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. கிரிக்கெட் விதிகளின்படி, திரையில் ரீப்ளே தோன்றுவதற்கு முன்பே ரிவ்யூ கேட்கப்பட வேண்டும். ஆனால் வங்கதேச அணி ரீப்ளேயை பார்த்த பின்னரே முடிவெடுத்ததாகவும், இதற்காக அவர்கள் 15 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாகவும் பாகிஸ்தான் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இறுதியில் ஷாஹீன் அப்ரிடி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் பரிதாபமாக தோல்வியடைந்தது. தனி ஆளாக போராடிய சல்மான் அலி அகாவின் சதம் வீணானது.

இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் சல்மான் அலி அகாவை மெஹிதி ஹசன் மிராஸ் ரன் அவுட் செய்தபோது விளையாட்டு உணர்வு குறித்து பெரிய சர்ச்சை எழுந்தது. அப்போது ஆத்திரமடைந்த சல்மான் அகா தனது பேட் மற்றும் கையுறைகளை மைதானத்தில் வீசியதால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதமும், மெஹிதி ஹசனுக்கு 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
