
கன்சிஸ்டன்சி
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் என்றாலே புஜாரா, கோலி மற்றும் ரஹானே தான். இதில் இப்போது ஏகத்துக்கும் சொதப்புவது புஜாராவும், ரஹானேவும் தான். இருவரின் ஆட்டமும், கிரிக்கெட் விளையாடவே விருப்பம் இல்லாதவர்கள் விளையாடுவது போல் தான் இருக்கிறது. கடைசியாக, இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ரஹானே சதம் அடித்திருந்தார். ஆனால், அந்த சதத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரது ஆட்டத்தில் கன்சிஸ்டன்சி இல்லை. அவரால் அணிக்கு எந்த லாபமும், நன்மையும் இல்லை என்பதே உண்மை.

அதிகபட்ச ஸ்கோர்
புஜாராவின் நிலைமை அதைவிட மோசம். அவரைப் பற்றி நாமே நிறைய பேசிவிட்டோம். இதுவரை மொத்தம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா அடித்துள்ள ரன்கள் 2,656. ஆவரேஜ் 37.71. அதிகபட்ச ஸ்கோர் 193. இது அவரது கடந்த 10 ஆண்டுகால டிராக் ரெக்கார்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் பல கேள்விகளை எழுப்பியது. அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்ற கருத்து பரவலாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 447 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 26.93. அதிகபட்ச ஸ்கோர் 77. இதில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் விளையாடி 271 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 ரன்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 60 ரன்களும் எடுத்திருக்கிறார்.

நோ சதம்
இந்த சோதனைகளுக்கு மத்தியில், கேப்டன் விராட் கோலியும் போட்டிப் போட்டு சொதப்பி வருகிறார். கடந்த 2 வருடங்களில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதாவது அரைசதம் அடிப்பார். ஆனால், அதையும் பெரிய ஸ்கோராக அவரால் கன்வெர்ட் செய்ய முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய கோலி, லண்டன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் எடுத்ததால், ஓரளவுக்கு தனது பெயரை காப்பாற்றிக் கொண்டார். இப்படி, புஜாரா, கோலி, ரஹானே என்று இந்திய அணியின் வலிமைமிக்க மிடில் ஆர்டர் தொடர்ந்து ஆட்டம் கண்டுவரும் நிலையில், புஜாரா, ரஹானேவுக்கு மாற்று வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குரல்கள் பலமாக எழத் தொங்கியுள்ளன.

சதம் அடிக்கவில்லை
இந்நிலையில், இந்தியாவின் மிடில் ஆர்டர் சொதப்பல்ஸ் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தான் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "2019 முதல் 2021 வரையிலான 18-20 மாதங்களில், இந்தியாவின் மூன்று முக்கிய வீரர்கள் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. இந்த 20 மாதங்களில் புஜாரா ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அஜிங்கியா ரஹானே சிறப்பாக செயல்படவில்லை. 2021 இல் அவரது பேட்டிங் ஆவரேஜ் 20 கூட இல்லை. விராட் கோலி ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் அவரை நம்பர் 1 வீரராக கருதுகின்றனர். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி இன்னும் வலுவாக மாறும்.

தாங்கும் இளைஞர்கள்
இந்திய பேட்டிங் வரிசையின் மொத்த எடையையும், கடந்த 2 வருடங்களாக இளைஞர்களே தாங்கி வருகின்றனர். கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், மற்றும் ரவீந்திர ஜடேஜா கூட மிடில் மற்றும் லோ ஆர்டரில் ரன்கள் எடுத்தனர். அவர்கள் இந்திய பேட்டிங்கின் பொறுப்பை ஏற்றுள்ளனர். வெளிநாடுகளில் இந்திய வெற்றிகள் இந்த இளைஞர்களின் பங்களிப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும், "என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்

மாற்றுக்கருத்து இல்லை
இன்சமாம் சொல்வது நிதர்சனமான உண்மை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியாவின் மிடில் ஆர்டர் தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பெரிய தலைவலியாக இருக்கிறது. யோசித்துப்பாருங்க. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ரோஹித் மற்றும் ராகுல் ஒருவரும் தலா 20 ரன்களில் ஆட்டமிழந்திருந்தால், இந்திய அணி 150 ரன்களை கூட எந்த இன்னிங்ஸிலும் தாண்டியிருக்காது. இந்த 150 ரன்னும் லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜாவால் தான் வந்திருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மட்டும் மிடில் ஆர்டரில் வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தால், நிச்சயம் இந்திய அணி அட்லீஸ்ட் போட்டியை டிராவாவது செய்திருக்கும். இப்போது, 2வது டெஸ்ட் போட்டியில், ரோஹித் - ராகுல் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் அடித்தும், இந்தியா 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. இங்கிலாந்து தொடரில், தொடர்ந்து இதேபோன்ற மோசமான ஆட்டத்தை மிடில் ஆர்டர் வெளிப்படுத்தினால், இத்தொடரை இழப்பதை யாராலும் தவிர்க்க முடியாது.


Click it and Unblock the Notifications