இந்திய ஏஜெண்டை பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமனம் செய்வதா? எப்படி விஸ்வாசம் இருக்கும்- லத்தீப் கேள்வி
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது விசுவாசம் குறித்து முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் முன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களின் பின்னணியை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தடுமாறி வரும் சூழலில் லத்தீப்பின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, டெஸ்ட் பயிற்சியாளராக இருந்த சர்பராஸ் அகமது நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வெள்ளை-பந்து கிரிக்கெட்டின் பயிற்சியாளரான மைக் ஹெசன் டெஸ்ட் அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், ஹெடிங்லேயில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு சுருண்டது. தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரஷீத் லத்தீப், வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதில் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, முன்னாள் பயிற்சியாளர்களான பாப் உல்மர் மற்றும் ஜியோஃப் லாசன் ஆகியோரை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
"மைக் ஹெசனைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு விசுவாசம் என்பது மிக முக்கியம். பாப் உல்மர் மற்றும் ஜியோஃப் லாசன் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றினர். அவர்கள் லாகூரிலேயே தங்கி தங்கள் கடமையைச் செய்தனர்," என்று லத்தீப் தெரிவித்தார்.
மைக் ஹெசன் கடந்த 2025 மே மாதம் பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக அவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார்.
இந்த ஐபிஎல் பிஙன சுட்டிக்காட்டிய லத்தீப், "ஐபிஎல் தொடரில் பணியாற்றிவிட்டு பாகிஸ்தான் அணிக்கு வரும் பயிற்சியாளர்கள் மீது எப்போதும் ஒருவித சந்தேகம் நீடிக்கும். நான் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், இவர்களின் தொழில்முறை தொடர்புகளையும் வரலாற்றையும் ஆராய்வது அவசியம். ஐபிஎல் அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களை சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இதன் மூலமே ஏஜெண்ட்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்று எச்சரித்துள்ளார்.
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை விட 23 ரன்கள் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


