சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிராக அடித்து தூள் கிளப்புவேன்.. பாகிஸ்தான் வீரர் சூளுரை
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக முழு திறமையை காட்டி விளையாடப்போகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹரிஷ் சொஹைல் உறுதிபட தெதரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல பாகிஸ்தான் அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதிரடி வீரர் உமர் அக்மல் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.

உமர் அக்மல்
இருமுறை அவருக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் எடுத்து பார்த்தும் அவரது உடல் நிலை முழுமையாக சரியாகவில்லை என்பதால், சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து அவர் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஹரிஷ் சொஹைல்
இதையடுத்து உமர் அக்மலுக்கு பதிலாக ஹரிஷ் சொஹைல் எனும் இடதுகை பேட்ஸ்மேனை களமிறக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். உடல் தகுதி தேர்வில் அவர் தகுதி பெற்றுள்ளதையடுத்து பாகிஸ்தான் அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஜூன் 4ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவ்விரு பரம வைரிகள் நடுவேயான போட்டி வெகு காலத்திற்கு பிறகு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன் சூளுரை
இதனிடையே ஹரிஷ் சொஹைல் கூறுகையில், நான் முழு அளவில் பாடுபட்டு அணிக்காக ஆடுவேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் முழு திறமையையும் காட்டி ஆடுவேன்.

எல்லோரும் வெறி
இந்தியாவுக்கு எதிராக மிக சிறப்பாக ஆட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பாகிஸ்தான் அணி வீரரின் இலக்காகும். அதை செய்வேன் என கூறும் இந்த வீரர் பாகிஸ்தானுக்காக 22 போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 774 ரன்கள் எடுத்துள்ளார். ரன் சராசரி 43 ஆகும். ஸ்டிரைக் ரேட் 82.86.

தென் ஆப்பிரிக்கா, இலங்கை
பாகிஸ்தான் ஜூன் 7ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 12ம் தேதி இலங்கைக்கு எதிராகவும் முறையேே, பிர்மின்காம் மற்றும் கார்டிப் நகரங்களில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications