இந்த டீமை வச்சுகிட்டா உருட்டுறீங்க? அதுலயும் அந்த ரிஸ்வான் இருக்காரே.. பாக். உண்மை நிலைமையே இதுதான்
டெல்லி : பாகிஸ்தான் அணியின் பெரும் பலவீனம் ஒன்றை புள்ளி விவரத்துடன் கூறி விளாசி எடுத்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் தடுமாற்றத்தில் இருக்கும் நிலையில், அந்த அணியின் ஆசிய கோப்பை வாய்ப்பு மற்றும் உலகக்கோப்பை வாய்ப்புக்கள் பற்றி பேசிய போது ஆகாஷ் சோப்ரா அந்த அணியின் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்த வீரர்கள் பட்டியலை கூறி, அவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

இந்திய அணியிலும் கடந்த காலங்களில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்பதில் குழப்பம் இருந்தது. ஆனால், தற்சமயம் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், இஷான் கிஷன் என அந்த இடத்தில் பேட்டிங் செய்து தங்கள் திறமையை நிரூபித்த வீரர்கள் அணியில் உள்ளனர். அதனால், அது பெரிய தலைவலியாக இல்லை.
ஆனால், பாகிஸ்தான் அணி கடந்த 2019 உலகக்கோப்பை முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு வீரர்களை அந்த இடத்தில் பயன்படுத்தி உள்ளது. அதில் அதிக போட்டிகளை ஆடியவர் முகமது ரிஸ்வான். அந்த எட்டு வீரர்களும் சரியாக ரன் குவிக்கவில்லை என்பதை குறிப்பிட்டுள்ள அவர், முகமது ரிஸ்வான் நிலைமையும் பரிதாபமாக இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "2019 உலகக்கோப்பைக்கு பின் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்த ஒரு பாகிஸ்தான் வீரர் கூட சதம் அடிக்கவில்லை. முகமது ரிஸ்வான், ஹாரிஸ் சொஹைல், ஹைதர் அலி, அப்துல்லா ஷாபிக், ஆகா சல்மான், சர்ப்ராஸ் அஹ்மத், ஷான் மசூத், சவுது ஷகீல் ஆகியோர் அந்த இடத்தில் இதுவரை பேட்டிங் செய்துள்ளனர். சதத்தை கூட விட்டு விடுங்கள். இவர்களில் இரண்டு வீரர்கள் தான் அரைசதமே அடித்து இருக்கிறார்கள். ரிஸ்வான் ஏழு அரைசதமும், ஹாரிஸ் ஒரு அரைசதமும் அடித்துள்ளனர். அதில் ரிஸ்வான் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவரின் சராசரி 37 மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட் 85 தான்" எனக் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications