மும்பை: பாகிஸ்தான் அணி வீரர்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், சொந்த நலனுக்காக கிரிக்கெட் விளையாடி வருவதாக விமர்சித்துள்ளார். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று ஆயிரம் நாட்களுக்கு மேலாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. திறமையான வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் அரசியலும், வீரர்கள் இடையிலான ஒற்றுமையின்மையும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அதில், பாகிஸ்தான் அணியை நினைத்து கவலையாக உள்ளது. ஏனென்றால் ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்.
கிரிக்கெட்டை கொண்டாடும் நாடாக இருந்து வருகிறார்கள். அவர்களிடம் திறமையில்லாமல் தோல்வியடையவில்லை. ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஒரு மியூசிக்கல் சேர் போட்டியை போன்ற ஒரு சூழல் இருக்கிறது. அதற்கேற்ப பாட்டு போட்டவுடன், உடனடியாக அனைவரும் தங்களின் சேரை நோக்கி ஓட தொடங்கவிடுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்க்கும் எனக்கு அப்படிதான் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் தோல்வியடைந்த பின் பாபர் அசாம் கேப்டன்சியில் இருந்து விலகினார். பின்னர் ஷாகின் அப்ரிடி கேப்டனாக வந்த பின், திடீரென மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக நியமித்தார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்தை கேப்டனாக்கினார்கள். தற்போது பாபர் அசாம் மீண்டும் விலகி இருக்கிறார்.
அதேபோல் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று ஆயிரம் நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்களுக்கு கிரிக்கெட்டராக எதில் கவனம் உள்ளது என்று தெரியவில்லை. எனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதா அல்லது அணியில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் நிலையான உணர்வில் இல்லை. ஓய்வறையில் உள்ள பல வீரர்களும் தங்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் கொண்டுள்ளார்கள். அணியின் மீதான கவனத்தை குறைத்துவிட்டதாக விமர்சித்துள்ளார். இதே கருத்தை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.