கடைசி பந்து சிக்சர்.. தனியாளாக ஆடிய மியான்தத்.. ஆசிய கோப்பை வரலாறு
மும்பை : ஆசிய கோப்பை தொடர் ஒருபுறம் நடந்து வர அதை சிறிது மாற்றி மற்றொரு தொடர் 1986இல் தொடங்கப்பட்டது. அதுதான், ஆஸ்ட்ரல் - ஆசிய கோப்பை.
ஆசியா கோப்பை கிரிக்கெட் நாடுகள் என்றால் அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே. அதனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து நாடுகளை சேர்ந்து இந்த ஆஸ்ட்ரல் - ஆசிய கோப்பை தொடங்கியது.
இந்த தொடரின் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ். ஸ்ரீகாந்த், கவாஸ்கர், வெங்க்சர்க்கார், ரவி சாஸ்திரி, அசாருதீன் போன்ற பிரபல வீரர்கள் பலர் அணியில் இருந்தனர்.

மூன்று அரைசதம்
முதலில் ஆடிய இந்தியாவில், துவக்க வீரர்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் இணைந்து இந்தியாவை அருமையாக வழிநடத்தினர். அதிரடியாக ஆடிய ஸ்ரீகாந்த் 80 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். கவாஸ்கர் 92 ரன்கள், வெங்க்சர்க்கார் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா 245 ரன்கள்
மற்ற இந்திய வீரர்கள் சொதப்ப, இந்தியா 245 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தன் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. 50 ஓவர்களில் 245 ரன்கள் என்பது அந்த காலகட்டத்தில் கடுமையான இலக்கு தான். அதை துரத்த வந்தது இம்ரான் கானின் பாகிஸ்தான்.

தனியாக சுமந்த மியான்தத்
பாகிஸ்தானில் மியான்தத் தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இரண்டு பேர் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்தனர். மற்றவர்கள் ஆட்டமிழந்து கொண்டே வர, மறுபுறம் மியான்தத் பொறுப்பாக ஆடினார். சதமும் அடித்தார்.

கடைசி ஓவர் பதற்றம்
கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை. சேத்தன் சர்மா பந்து வீசினார். வாசிம் அக்ரம் ரன் அவுட் ஆனார். அடுத்து சுல்கர்னைன் போல்டானார். இடையே ஏழு ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. மியான்தத் பேட்டிங் செய்தார். யார்க்கர் போட முயன்ற சேத்தன் சர்மா, சற்றே அளவு மாறி புல்-டாஸாக வீசி விட்டார். மியான்தத் அதை சிக்சர் அடிக்க பாகிஸ்தான் கடைசி பந்தில் வென்றது. அன்று நன்றாக ஆடிய இந்தியா, ஒரு ஓவரில் வெற்றியை தவற விட்டது.


Click it and Unblock the Notifications