ரிஸ்வான் செய்த தரமான சம்பவம்.. வேற லெவல் ஆட்டமாடிய பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இலங்கை?
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 73 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியின் மிக முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால், ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதன்பின் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக சஃபிக் - ஃபகர் ஜமான் களமிறங்கினர். இதில் ஃபார்மில் இல்லாத ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் பாபர் அசாம் - சஃபிக் இணை நிதானமாக ரன்கள் சேர்த்தது. இவ்ர்களின் பார்ட்னர்ஷிப் 64 ரன்களை எட்டிய நிலையில், பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இருப்பினும் இன்னொரு பக்கம் ரிஸ்வானுடன் இணைந்து சஃபிக் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் 52 ரன்களில் அவர் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து வந்த முகமது ஹாரிஸ் 3 ரன்களிலும், முகமது நவாஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 27.4 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனிடையே மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது வந்த ரிஸ்வான் - இஃப்திகர் அஹ்மதி இணை பவுண்டரிகளாக விளாசியது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 49 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் இஃப்திகர் அஹ்மத் சிக்சர்களாக விளாச தொடங்கினார். இதனால் 38வது ஓவரில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. இதன்பின்னர் பாகிஸ்தான் அணியின் இரு வீரர்களும் பவுண்டரிகளை விளாச அதிக முயற்சிகளை எடுத்தனர்.
சிறப்பாக ஆடிய இஃப்திகர் அஹ்மத் 40 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 41 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரை வீச மதுஷன் அழைக்கப்பட, 2வது பந்தில் ஷடாப் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 73 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.


Click it and Unblock the Notifications