ஹைதராபாத் : கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற உணவகத்திற்கு சென்று சாப்பிட்டனர்.
அப்போது அவர்கள் சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை பார்த்து அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் கவலை அடைந்த தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் மட்டன் கறியை ஒரு பிடி பிடித்ததை பார்த்து எங்கே ஒரே நாளில் உடல் எடையை அதிகமாக்கி விடப் போகிறார்கள் என பயிற்சியாளர்கள் குழு பயந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரே கூறியது தான் இதில் வேடிக்கை.
2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் முதல் இரண்டு பயிற்சிப் போட்டியும் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. அவர்களின் முதல் உலகக்கோப்பை போட்டியும் அதே நகரத்தில் தான் நடக்க உள்ளது.
ஹைதராபாத் வந்தது முதலே பாகிஸ்தான் வீரர்களுக்கு உச்சபட்ச வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பயிற்சிப் போட்டி முடிந்த உடன் பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற அசைவ உணவகமான "ஜுவல் ஆஃப் நிஜாம்"-முக்கு சென்றனர்.

அந்த உணவகத்தின் அத்தனை சிறந்த உணவுகளையும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவிற்கு தயாரித்து அளித்தனர். அது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பே பகிர்ந்து இருந்தது.
அதில் அவர்களுக்கு சிக்கன் கறி, மட்டன் கறி வகைகளில் என்னென்ன உணவு வகைகள் உள்ளதோ அவை எல்லாவற்றையும் அளித்து திக்குமுக்காட வைத்தனர். அந்த ஹோட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட்ட உணவுகளின் விலைப் பட்டியல் குறித்த செய்தி ஒன்றை நாம் முன்பே வெளியிட்டு இருந்தோம். (அந்த செய்தி லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது).
பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் என முக்கியமானவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.
அந்த உணவகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட்ட வேகத்தை பார்த்து அவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். எங்கே ஒரே நாளில் வீரர்கள் எடையை அதிகமாக்கிக் கொள்வார்களோ என பயந்து போய் பார்த்து சாப்பிடுமாறு கூறி இருக்கிறார்கள்.
இது குறித்து பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் பேசி இருக்கிறார். "அங்கே சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் பயிற்சியாளர் குழு, நாங்கள் எங்கே குண்டாகி விடுவோமோ என கவலைப்பட்டனர்." என்று ஒரு பேட்டியில் சிரித்துக் கொண்டே கூறி இருக்கிறார்.
முதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து இருந்தனர். அடுத்த பயிற்சிப் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி அடைந்தால், நிஜாம் ஹோட்டல் மட்டன் கறியை வைத்தே அவர்களை உண்டு இல்லை என செய்து விடுவார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். என்ன நடக்கப் போகுதோ?