மரண பீதியில் வீரர்கள்.. PAK vs SL ஒருநாள் தொடர் தள்ளிவைப்பு.. கண்துடைப்பு நாடகம் நடத்தும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தீவிர பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஒரு கண்துடைப்பு நாடகமாக, வெறும் ஒரு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வீரர்களை, "சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும், மீறினால் விசாரணைகளை சந்திக்க நேரிடும்" என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) உயிர் பயத்தில் இருக்கும் தங்கள் நாட்டு வீரர்களை எச்சரித்து இருக்கிறது.

இலங்கை அணி தங்கியிருக்கும் இஸ்லாமாபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) போட்டி அட்டவணையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2-வது ஒருநாள் போட்டி, ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நடைபெறும். நவம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு நாள் தள்ளி வைப்பதால் என்ன பெரிய மாற்றம் நடந்து விடும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இஸ்லாமாபாத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அணியைச் சேர்ந்த சுமார் 8 வீரர்கள், தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, உடனடியாக நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உறுதியளித்ததோடு, அவர்களை மிரட்டும் தொனியில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "வீரர்களின் பாதுகாப்பு அச்சம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் திட்டமிட்டபடி இந்தச் சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும். வாரியத்தின் இந்த உத்தரவை மீறி, எந்தவொரு வீரரோ அல்லது அணி நிர்வாகியோ நாடு திரும்ப முடிவு செய்தால், அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீரர்களின் இந்த அச்சத்திற்கு, 2009-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலே முக்கியக் காரணம். லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்கு அணி வீரர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.
அந்தப் பயங்கரமான சம்பவத்தின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் வீரர்களைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஒருபுறம் உயிர் பயம், மறுபுறம் சொந்த நாட்டு வாரியத்தின் மிரட்டல் என செய்வதறியாது திகைத்து, இலங்கை வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். நவம்பர் 11-ம் தேதி நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications