PAK vs ZIM: 53 பந்துகளில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! 2வது ஒருநாளில் ஜிம்பாப்வேக்கு செம பதிலடி
மும்பை : ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை தழுவியது.இதனை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க டியான் மேயர்ஸ் மட்டும் 33 ரன்கள் சேர்த்தார்.

சீன் வில்லியம்ஸ் 31 ரன்களும், சிக்கந்தர் ராசா 17 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா மூன்று விக்கெட்டுகளும் அப்ரார் அகமத் நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் எல்லாம் 145 ரன்களில் அனைத்து விக்கெட்களையுமே இழந்தது.
இதனை அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராக களம் இறங்கிய சையும் அயூப் மற்றும் அப்துல்லா ஷபிக் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய சையும் அயூப் 53 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை சயூம் அயுப்க்கு கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாம்பவான் ஷாகித் அபிரிடி தொடர்ந்து அதிவேகமாக சதம் அடித்ததில் முதல் இரண்டு இடத்தையும் அவர்தான் பிடித்திருக்கிறார்.
தற்போது மூன்றாவது இடத்தை சையும் அயூப் பெற்றிருக்கிறார்.கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த அயூப் 62 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடங்கும். மறுபுறம் அப்துல்லா ஷபிக் 48 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் எல்லாம் விக்கெட் இழப்பு எதுவும் இன்றி வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது. இதனை அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை நவம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு தொடங்கும்.


Click it and Unblock the Notifications