2027 உலககோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெல்லும்.. பக்கர் சமான் நம்பிக்கை
மும்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் பக்கர் சமான் தெரிவித்துள்ளார். ஐசிசி கோப்பைக்கான தனது நீண்டகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி கடைசியாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஐசிசி கோப்பையைக் கைப்பற்றியது. அதன்பிறகு சர்வதேச அளவில் முக்கியக் கோப்பை ஏதும் வெல்லாதது அணியினரிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கோப்பையை வெல்வது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாகவும் பக்கார் ஜமான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. நீண்ட காலமாக ஐசிசி பட்டத்தை வெல்ல முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைவது இயல்புதான் எனக் குறிப்பிட்ட பக்கார் ஜமான், அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை விட கோப்பையைக் கைப்பற்றுவது நாட்டுக்கு அளிக்கும் மகிழ்ச்சி முற்றிலும் தனித்துவமானது என்றார்.
உலகக்கோப்பைத் தொடருக்காக அணி தீவிரமாகத் தயாராகி வருவதாகக் கூறிய அவர், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்புத் தொடர் உலகக்கோப்பைக்கான சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க உதவும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், உள்நாட்டு 50 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்களுக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எளிதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறித்துப் பேசிய அவர், சிவப்புப் பந்து மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுவதால், டெஸ்ட் தொடரின் முடிவுகள் ஒருநாள் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications


