சென்னை: தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவிருந்த ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவுடனான அரசியல் பதற்றம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணமாகக் காட்டி, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தத் தொடரிலிருந்து விலகுவதாகப் பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலகல் முடிவை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் (PHF) செயலாளர் ராணா முஜாஹித் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆம், தற்போதைய சூழல், போட்டியில் பங்கேற்க உகந்ததாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிர உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சி. அவர்களது வீரர்கள் எங்கள் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. பின்னர், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்துவிட்டனர். இது அவமானகரமானது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் அரசின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "நாங்கள் எங்கள் அரசு மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடம் ஆலோசனை கேட்டோம். தற்போதைய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஜூனியர் உலகக் கோப்பைக்காக அணியை இந்தியாவுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என்றும், இது வீரர்களுக்குக் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்" என்றார் அந்த அதிகாரி.
தங்களது இந்த முடிவு குறித்து சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திற்கு (FIH) அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதனை இந்திய ஹாக்கி அமைப்புக்குத் தெரியப்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பையில், இந்தியாவும் பாகிஸ்தானும் 'பி' பிரிவில் சிலி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றிருந்தன. தற்போது பாகிஸ்தான் விலகியுள்ளதால், அந்த அணிக்குப் பதிலாக மாற்று அணியை அழைப்பதா என்பது குறித்து FIH இனி முடிவு செய்யும்.
இந்தியாவில் நடைபெறும் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியிலிருந்தும் பாகிஸ்தான் விலகியது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பதற்றம், விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.