2025 மகளிர் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது.. பிசிபி தலைவர் கறார் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற உள்ள 2025 ஐசிசி மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில், பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பிசிசிஐ வேறு எங்கே நடத்த விரும்புகிறதோ, அங்கு பாகிஸ்தான் மகளிர் அணி சென்று விளையாடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்திய நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவித்தது.
அதன் பிறகு பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன் முடிவில், இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஐசிசி போட்டிகள் அனைத்தும் பொதுவான மைதானம் ஒன்றில் நடத்தப்படும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இந்திய ஆடவர் அணி பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டன.
தற்போது 2025 மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. ஆனால், தற்பொழுது பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியா வராது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒப்பந்தத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டிருப்பதால், இதற்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் பாகிஸ்தான் மகளிர் அணி 5 போட்டிகளில் விளையாடி அந்த ஐந்திலும் வெற்றி பெற்றது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், தாய்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய ஐந்து அணிகளையும் சொந்த மண்ணில் வீழ்த்தி, பாகிஸ்தான் அணி ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.
இந்தத் தொடரை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய ஆறு அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்குத் தரவரிசைப்படி தகுதி பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications