துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சனிக்கிழமை அன்று ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 16 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான், முதல் முறையாக 200 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர் சயிம் அயூப் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாச, மற்றொரு வீரரான ஹசன் நவாஸ் வெறும் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

இந்தச் சாதனை பாகிஸ்தான் அணிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, இதுவரை ஒருமுறை கூட 200 ரன்களைக் கடந்ததில்லை. இதற்கு முன்பு, 2022 ஆசியக் கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிராக 193/2 ரன்கள் எடுத்ததே அமீரகத்தில் அவர்களின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது, 16 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, அந்தத் தடையை உடைத்து 200 ரன்களைக் கடந்துள்ளனர்.
207/10 - ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக - ஷார்ஜா - ஆகஸ்ட் 30, 2025
193/2 - ஹாங்காங்குக்கு எதிராக - ஷார்ஜா - செப்டம்பர் 2, 2022
189/2 - நமீபியாவுக்கு எதிராக - அபுதாபி - நவம்பர் 2, 2021
189/4 - ஸ்காட்லாந்துக்கு எதிராக - ஷார்ஜா - நவம்பர் 7, 2021
187/10 - இலங்கைக்கு எதிராக - துபாய் - டிசம்பர் 13, 2013
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை 53 டி20 போட்டிகளில் விளையாடி 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 200 ரன்களைக் கடக்க முடியாமல் இருந்தது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. தற்போது, இளம் வீரர்களின் அதிரடியால் அந்தக் குறையையும் போக்கி, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்ச டி20 ஸ்கோரைப் பதிவு செய்த அணி அயர்லாந்து (225/7, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) என்பது குறிப்பிடத்தக்கது.