Olympics 2024: இந்த முறை பத்தை தாண்டுமா பதக்க எண்ணிக்கை? ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வென்ற பட்டியல்
டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இந்தியா 117 வீரர்களுடன் பங்கேற்க உள்ளது. கடந்த மூன்று முறை நடந்த ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா இரண்டு முறை ஐந்து பதக்கங்களுக்கும் மேல் வென்றுள்ளது.
ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா இரண்டு முறை மட்டுமே ஐந்து பதக்கங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. 2012 லண்டன் தொடர் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களில் அந்த மைல்கல்லை இந்தியா எட்டி இருந்தது.

2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில் 83 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அதில் இந்தியா மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றது. இரண்டு வெள்ளி பதக்கங்கள் மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை அப்போது வென்று இருந்தது. அதற்கு அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 124 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் அதில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றிருந்தது. அதில் ஒரு தங்கப் பதக்கமும் அடங்கும். ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை அப்போது வென்று இருந்தது.
இடையே நடந்த 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா 117 வீரர், வீராங்கனைகளுடன் பங்கேற்றது. அப்போது துரதிஷ்டவசமாக மொத்தம் இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்று இருந்தது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் மட்டுமே இந்தியா வென்று இருந்தது.
தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 100க்கும் மேற்பட்ட வீரர்களுடன் பங்கேற்க உள்ளது. இந்த முறையும் இந்தியா மீண்டும் ஐந்து பதக்கங்கள் என்ற மைல்கல்லை தாண்டி, அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, 2020இல் இந்தியா ஏழு பதக்கங்களை வென்று இருக்கும் நிலையில், இந்த முறை பத்து பதக்கங்களை தாண்டி இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications