பாரிஸ் ஒலிம்பிக் 2024.. எப்போது, எந்த சேனலில் பார்ப்பது? எந்த ஓடிடி-யில் இலவசமாக பார்க்கலாம்?’
பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே கால்பந்து, ரக்பி செவன்ஸ் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இன்று வில்வித்தை போட்டிகளும் தொடங்கவுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும் பாரிஸில் குவிந்து வருகின்றனர்.
அதேபோல் பாரிஸில் நாளை ஒலிம்பிக் தொடர் விழா பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. வழக்கமாக மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் அந்தந்த நாட்டின் வீரர்கள், வீராங்கனைகள் தேசியக் கொடியுடன் பேரணியாக நடந்து வருவார்கள். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா செய்ன் நதியில் திட்டமிடட்டப்பட்டுள்ளது. சுமார் 10,500க்கும் அதிகமான வீரர்கள் படகில் பேரணியாக வரவுள்ளனர்.

இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளனர். இதனால் இம்முறை நிச்சயம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சார்பாக பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசியக் கொடியை ஏந்தவுள்ளனர்.
இதனை சுமார் 6 லட்சம் பேர் நேரில் பார்க்கும் வகையில் பிரான்ஸ் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் 6 கிமீ தூரம் வரை படகில் விளையாட்டு வீரர்கள் பயணிக்கவுள்ளனர். பிரம்மாண்டமாக நடக்கும் தொடக்க விழா உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான நேர இடைவெளி சுமார் 3.30 மணி நேரமாகும். இதனால் இந்திய நேரப்படி 11 மணிக்கு தொடக்க விழா தொடங்கும்.
அதேபோல் ஒலிம்பிக் போட்டிகளை இந்திய ரசிகர்கள் நேரலையில் பார்க்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ் 24 தொலைக்காட்சி நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளை நேரலை செய்யவுள்ளது. ஸ்போர்ட்ஸ் 24 தொலைக்காட்சி ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் தங்களின் சொந்த மொழியிலேயே காண முடியும்.
அதேபோல் ஓடிடி-யை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளை நேரலை செய்யவுள்ளது. மொபைல் பயன்படுத்தும் அனைவரும் ஜியோ சினிமாஸ் செயலி மூலமாக இலவசமாக நேரலையில் பார்க்க முடியும். ஜியோ சினிமாஸ் செயலியிலும் பல்வேறு மொழிகளில் போட்டிகளை ரசிக்கும் வகையில் திட்டமிடட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications