"எங்களுக்குள் இன்னும் பாக்கி இருக்கு".. கே.எல்.ராகுல் பற்றி டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் பேச்சு
டெல்லி: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் டிரேடிங் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாகப் வதந்தி பரவியது. அது குறித்து அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல்.ராகுலை வைத்து செய்ய வேண்டிய வேலைகள்" மீதம் உள்ளதாக விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகக்கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானே வெளியேறியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல்.ராகுலை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் மிகவும் முக்கியமானவர். அணிக்கு முன்னுரிமை கொடுக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எங்களுக்குள் இன்னும் முடிக்கப்படாத வேலைகள் உள்ளன. டெல்லி அணியைப் பெருமைப்படுத்த நாங்கள் இருவரும் இணைந்து கடுமையாக உழைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்த் ஜிண்டாலின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள கே.எல்.ராகுல், "மிக்க நன்றி, அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார். டெல்லி அணியில் இணைந்ததில் இருந்து கடந்த 2 சீசன்களிலும் கே.எல்.ராகுல் 1000 ரன்களுக்கு மேல் குவித்து அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்பியுள்ளதால், அவர் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார். இதனால் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் சுமையின்றி தனது பேட்டிங்கில் மட்டும் முழு கவனம் செலுத்த முடியும். ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி டெல்லி அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கவும் அதிக வாய்ப்புள்ளது. இது டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications

