டெஸ்ட் போட்டினா இதுதான்பா..!! 5ம் நாளில் கெத்து காட்டும் ஆஸி, - பாக்.. ரசிகர்களுக்கு செம விருந்து!
கராச்சி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான படு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விடாப்பிடியாக பேட்டிங் செய்ததால், போட்டி சமனில் முடிவடைந்தது. மேலும் பிட்ச்-ன் மீது விமர்சனமும் எழுந்தது.

கெத்து காட்டிய ஆஸ்திரேலியா
இந்நிலையில் இந்திய அணியின் காப்பா டெஸ்டிற்கு பிறகு படு சுவாரஸ்யமான டெஸ்டாக 2வது போட்டி அமைந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் பவுலர்களை கதற வைத்தனர். உஸ்மான் கவாஜா 160 ரன்கள், ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 என அடித்ததால் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது.

சொதப்பிய பாகிஸ்தான்
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி பதற்றத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வந்த வேகத்தில் அனைவரும் வெளியேற பாகிஸ்தான் அணி 148 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 408 ரன்கள் என்ற பெரும் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியாவிடம், டிக்ளர் செய்யுங்கள் என பாகிஸ்தான் ரசிகர்கள் கெஞ்சினர். ஸ்கோரும் அதிகமாக இருப்பதால் 97 / 2 ரன்களுக்கே டிக்ளர் செய்தது. மேலும் 505 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் தந்த அதிர்ச்சி
2 நாட்களில் 500 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற சிக்கலில் இருந்த பாகிஸ்தான், மாஸான கம்பேக் தந்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் சரிந்த போதும், தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் 4ம் நாளின் முடிவில் அந்த பாகிஸ்தான் 192 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், அபுதுல்லா 71 ரன்களுடனும் இருந்தனர்.

கடைசி நாள் த்ரில்
இந்நிலையில் கடைசி நாளான இன்று இரு அணிகளுமே கடும் மோதலில் உள்ளன. ஒரு புறம் அப்துல்லா 96 ரன்களுக்கு வெளியேற, வவாத் ஆலம் 9 ரன்களுக்கும் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம் கண்டது. ஆனால் மற்றொரு புறம் கேப்டன் பாபர் அசாம் 150 ரன்களை கடந்து தனி ஆளாக அணியை மீட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி வருகிறார்.

நகம் கடித்த ரசிகர்கள்
பாகிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 43 ஓவர்களில் 207 ரன்கள் தேவை என்ற சூழல் உள்ளது. மற்றொரு புறம் ஆஸ்திரேலிய அணி இன்னும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் வெற்றி பெற்றுவிடும். இதனால் யார் வெல்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications