சென்னை : இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் போட்டியில் செய்த தவறை பற்றி கேள்வி கேட்ட போது தான் அதை மறந்து விட்டதாக கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

பாட் கம்மின்ஸ் இப்படி பேசக் காரணமான சம்பவங்கள் இவைதான். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் என மூன்று ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியாவை மடக்கியது. ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா விக்கெட்களை இழந்து ஆல் - அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தனது அணியில் ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் என இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே வைத்திருந்தது. அவர்களாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணியை 2 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதன் பின் வந்த விராட் கோலி கொடுத்த கேட்ச்சை ஸ்டார்க் விட்டுவிட்டார். அப்போது இந்தியா 10 ரன்கள் தான் எடுத்து இருந்தது. பின்னர் கோலி 85, கேஎல் ராகுல் 97 ரன்கள் எடுக்க இந்தியா வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின் பேசிய ஆஸ்திரேலிய அணி பாட் கம்மின்ஸ், "நாங்கள் பேட்டிங்கில் 50 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். 200 ரன்களுக்கு கீழ் எடுத்த ரன்களை வைத்து வெல்வது கடினம். இந்தியாவின் பவுலிங் தாக்குதல் சிறப்பாக இருந்தது. அவர்களின் ஸ்பின்னர்கள் போட்டியை கடினமானதாக மாற்றினார்கள். எங்கள் அணியின் இரண்டு ஸ்பின்னர்கள் தான் இருக்கிறார்கள் என நான் மனம் வெதும்பவில்லை." என்றார்.
மேலும், "அந்த கேட்ச் வாய்ப்பு போனதைப் பற்றி நான் எப்போதோ மறந்து விட்டேன். அதை நினைவுபடுத்தாதீர்கள். 10 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு என்பது ஒரு கனவு போல இருந்திருக்கும். இது ஒன்பது போட்டிகளில் ஒன்று"என்று தோல்விக்கு அவரே ஆறுதல் கூறிக் கொண்டார்.