கம்மின்ஸ் எடுத்த மோசமான முடிவு.. வெளுத்து வாங்கிய முகமது ஷமி.. ஒரு பேட்ஸ்மேன் கூட இப்படி செய்யலையே!
நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் எடுத்த மிக மோசமான முடிவை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் ஏகபோகத்திற்கு ஸ்கோரை உயர்த்திக்கொண்டனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸை வென்ற போதும் முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜா,அக்ஷர் பட்டேல் ஆகியோரின் அரைசதத்தின் காரணமாக 2வது நாளை இந்திய அணி 321 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற வலுவான நிலையில் முடித்தது.

3வது நாள் ஆட்டம்
இதனையடுத்து 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் செஷனிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 82 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா- அக்ஷர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பை உடைத்தனர். 70 ரன்களை அடித்து வலுவாக இருந்த ரவீந்திர ஜடேஜா மெர்ஃபியிடம் சிக்கி அவுட்டானார். இதனால் 328 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்களை இழந்தது. அப்போது இந்தியா 151 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.

முகமது ஷமி அதிரடி
கடைசிகட்ட பார்ட்னர்ஷிப்பும் உடைந்ததால் 350 ரன்களை கூட இந்திய அணி எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த மோசமான தவறுகள் அதனை மிகவும் சுலபமாக்கி கொடுத்தது. அதாவது டெயில் எண்டர் ஷமி வந்தவுடன் வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு அட்டாக் செய்திருக்க வேண்டும். நல்ல ஃபார்மில் உள்ள அக்ஷர் விடுத்து, மறுமுனையில் உள்ள டெயில் எண்டரை வீழ்த்தியிருக்கலாம். ஏனென்றால் அதிவேகமான பந்துகளை அவர்கள் சமாளிப்பது சிரமம். வழக்கமாக அதை தான் அனைத்து கேப்டன்களும் செய்துள்ளனர்.

கம்மின்ஸின் தவறு
ஆனால் பேட் கம்மின்ஸ் மட்டும் தொடர்ச்சியாக நாதன் லைன் மற்றும் டாட் மர்ஃபி என ஸ்பின்னர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். ஸ்பின்னுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடும் ஷமி அதனை பயன்படுத்திக்கொண்டார். இதனால் 9வது விக்கெட்டிற்கு மட்டும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தன. ஷமியின் அதிரடிகளை பார்த்து ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனே வியக்கும் அளவிற்கு இருந்தது.

என்ன விளைவு
47 பந்துகளை சந்தித்த முகமது ஷமி 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார். எனினும் அவரால் அரைசதத்திற்கு செல்ல முடியவில்லை. முன்கூட்டியே வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வந்திருந்தால் இது நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். இதே போல இன்னிங்ஸின் தொடக்கத்தில் இருந்தே கம்மின்ஸ் மற்றொரு மெகா தவறை செய்தார்.

தொடக்கமே தவறு
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பெவிலியன் எண்டில் இருந்து ஸ்பின்னர்களை வீச வைத்தார். இதே போல ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பெவிலியன் எண்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசினர். இதனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணியில் அக்ஷர் பட்டேலுக்கும் இதே நடந்ததால் தான் அவரால் பெரியளவில் விக்கெட் எடுக்க முடியாமல் போனது.


Click it and Unblock the Notifications