IPL 2025: குஜராத் தோல்விக்கு காரணமே இவர்தான்.. தூக்குங்கடா செல்லத்தை.. கொண்டாடிய ஸ்ரேயாஸ்
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியின் அருகே வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போது விஜயகுமார் வைசாக் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கையே தலைகீழாக மாற்றியது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கும், பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கும் முக்கிய காரணமே அவர்தான் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் விஜயகுமாரை கட்டி அணைத்து பாராட்டினார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. ஷேர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி வந்தனர்.
அப்போது 15வது ஓவரை விஜயகுமார் வைசாக் வீசினார். இந்தப் போட்டியில் இதுவே அவரது முதல் ஓவராகவும் இருந்தது. அந்த ஓவரில் அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஆறு ஓவர்களில் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் குஜராத் இருந்தது. அப்போது அவர் 15வது ஓவரில் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். அடுத்து 17வது ஓவரிலும் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். விக்கெட்கள் வீழ்த்தாத போதும் மிகக் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதன் பிறகு கடைசி மூன்று ஓவர்களில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைக்குச் சென்றது குஜராத் டைட்டன்ஸ். அதனால் ஒவ்வொரு ஓவரிலும் மூன்று அல்லது நான்கு பவுண்டரி அடிக்க வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. அதனால் விக்கெட்டுகளும் வரிசையாகப் பறிபோனது.
ஆட்டத்தின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஜயகுமார் வைசாக் 19வது ஓவர் வீசியபோது 18 ரன்கள் வரை விட்டுக் கொடுத்திருந்தாலும், அதற்கு முன்பு அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியை மாற்றிவிட்டன. அதன் பிறகு ஏற்பட்ட அழுத்தத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.
போட்டியின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், விஜயகுமார் வைசாக்கை தட்டிக் கொடுத்து அவரது சிறந்த பந்துவீச்சுக்காக பாராட்டினார். சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலரும் விஜயகுமார் வைசாக்கை பாராட்டி வருகின்றனர்.
முக்கியமான நேரத்தில் விஜயகுமார் வைஷாக் இரண்டு ஓவர்கள் வீசி பத்து ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை ஏற்றியது ஆட்டத்தின் முடிவை மாற்றியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
செய்தி சுருக்கம்:
- குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- குஜராத் அணி வெற்றிக்கு அருகில் இருந்தபோது விஜயகுமார் வைசாக்கின் இரண்டு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
- விஜயகுமார் வைசாக் தனது முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
- கடைசி மூன்று ஓவர்களில் குஜராத்துக்கு 57 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன.
- பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விஜயகுமார் வைசாக்கின் பந்துவீச்சை பாராட்டினார்.
- ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்ததற்காக ஆட்டநாயகன் விருதை வென்றார்.


Click it and Unblock the Notifications