சண்டிகர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. வெறும் 112 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணி வெறும் 95 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பழிதீர்த்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. கேகேஆர் அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் எளிய இலக்கை நோக்கி கேகேஆர் அணி தரப்பில் டி காக் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சேவியர் பார்ட்லட் வீசிய முதல் ஓவரிலேயே சுனில் நரைன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது ஓவரில் டி காக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ரஹானே - ரகுவன்ஷி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை விளாசியது.
அதிலும் சேவியர் பார்லட் வீசிய 6வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்கள் குவித்தது. இதனால் கேகேஆர் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்ததாக பார்க்கப்பட்டது. இதன்பின்னரே பஞ்சாப் அணி தரப்பில் சாஹல் பவுலிங் செய்ய அறிமுகம் செய்யப்பட்டார்.
அவர் வீசிய முதல் ஓவரிலேயே கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே 17 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் அவர் வீசிய 2வது ஓவரில் ரகுவன்ஷி 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் ஆட்டம் கேகேஆர் அணியின் பக்கமே இருந்தது. தொடர்ந்து மேக்ஸ்வெல் பவுலிங்கில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சாஹல் வீசிய 3வது ஓவரில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 2 ரன்களிலும், அடுத்த பந்திலேயே ரமன்தீப் சிங் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த தருணம் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. இதனால் கேகேஆர் அணி 12 ஓவர்கள் முடிவில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஹர்சித் ராணாவும் 3 ரன்களில் பெவிலியன் செல்ல, களத்தில் ரஸ்ஸல் - வைபவ் அரோரா இருந்தனர்.
அப்போது கேகேஆர் அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 33 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழலில் சாஹல் தனது கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் 6, 6, 4 என்று 16 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் கேகேஆர் அணி வெற்றிக்கு 36 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனால் ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்திற்கு சென்றது.
இந்த நிலையில் 15வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி பந்தில் வைபவ் அரோரா ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரேயொரு விக்கெட் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் களத்தில் ரஸ்ஸல் இருந்தார். இதன்பின் மார்கோ யான்சன் அட்டாகில் வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரஸ்ஸல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கேகேஆர் அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா எழுந்து குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.