PBKS vs RCB: ஆர்சிபி அணியில் கேப்டன் நீக்கம்.. டாஸ் போட வந்த ஜிதேஷ்.. ஸ்ரேயாஸ்-க்கு 100வது போட்டி
தரம்சாலா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள அழகிய மலைப்பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது 100-வது ஐபிஎல் போட்டி என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ஆர்சிபி அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மா தற்காலிக கேப்டனாக ஆர்சிபி அணியை வழிநடத்துகிறார். ஹைதராபாத்தில் நடைபெற உள்ள அடுத்த போட்டியில் ரஜத் படிதார் மீண்டும் அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் சுயாஷ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் லோக்கி பெர்குசன் ஆகியோர் மீண்டும் களமிறங்குகின்றனர்.

கடந்த போட்டியில் சதம் விளாசி மிரட்டிய விராட் கோலி, இந்தப் போட்டியிலும் அதே அதிரடியைத் தொடருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 100-வது போட்டியில் கேப்டனாகக் களம் காணும் ஸ்ரேயாஸ் ஐயர், வெற்றியைப் பெறுவதில் உறுதியாக உள்ளார்.
ஆடுகளம் குறித்து மைக்கேல் கிளார்க் மற்றும் டேனி மோரிசன் கூறுகையில், தரம்சாலா மைதானம் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாகவும், ஆடுகளத்தில் அதிகளவில் புற்கள் காணப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகும் எனவும் தெரிவித்தனர். வெயில் அதிகமாக இருப்பதால் போட்டியின் இடையே சுழற்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக பேட்ஸ்மேன்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
அணிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் 11): ஜேக்கப் பெத்தெல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாற்று வீரர்கள் (Impact Subs): ரசிக் சலாம் தார், ஜோர்டான் காக்ஸ், அபிநந்தன் சிங், ஸ்வப்னில் சிங், கனிஷ்க் சௌஹான்
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் 11): பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கான்லி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஹர்பிரீத் ப்ரார், லோகி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்
பஞ்சாப் கிங்ஸ் மாற்று வீரர்கள் (Impact Subs): மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், விஷ்ணு வினோத், முஷீர் கான், பிரவீன் துபே
பிளே-ஆப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் முக்கியமான கட்டத்தில் இந்த ஆட்டம் நடைபெறுவதால், இரு அணிகளுமே வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும். ஸ்ரேயாஸ் ஐயரின் 100-வது கேப்டன்சி போட்டி அவருக்கு வெற்றியைத் தேடித் தருமா அல்லது தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா ஆர்சிபி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
