பாகிஸ்தான் வீரர் உங்க டீமில் ஆடணுமா.. அப்ப 24 லட்சம் கொடுங்க.. MLC தொடரில் வெடித்த சர்ச்சை
நியூயார்க்: அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையிலா சான்றிதழ் வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 24 லட்சம் ரூபாய் கட்டணம் கேட்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தால் மேஜர் கிரிக்கெட் லீக் அணி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஒரு வகையான பணம் பறிக்கும் செயல் என்று வர்ணித்துள்ள மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள், பாகிஸ்தான் வீரர்களைத் தங்களது அணிகளில் ஒப்பந்தம் செய்ய மறைமுகத் தடை விதிக்க ஆலோசித்து வருகின்றனர். மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்களின்படி, ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 25,000 அமெரிக்க டாலர் (சுமார் 24 லட்சம் ரூபாய்) கட்டணமாகக் கேட்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, இந்த சான்றிதழ் இல்லாமல் வெளிநாட்டு வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மட்டுமே சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது கட்டணத்திற்கு அந்த அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடும் போது, அவர்களது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்பந்தத் தொகையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் செலுத்தப்படும். ஆனால், மேஜர் லீக் கிரிக்கெட் போன்ற சிறிய அளவிலான தொடர்களில் இத்தகைய விதிகள் எதுவும் கிடையாது.
மேலும், உலகிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமே இத்தகைய கட்டணத்தைக் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி, வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படும் போது இந்தக் கட்டணம் குறித்துப் பேசாமல், மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய முடியாத கடைசி நேரத்தில் பிசிபி இந்த நிபந்தனையை விதிப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வியின் கவனத்திற்கு உரிமையாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். முறையான கொள்கைகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது முறையற்றது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், தங்களது வீரர்களை அனுப்ப இந்தக் கட்டணத்தைக் கேட்பது தங்களது உரிமை என்று நக்வி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கட்டணத்தை செலுத்தினாலும் அதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை என்றும், தேவைப்பட்டால் பிசிபி தடையில்லா சான்றிதழை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய கட்டணம் கேட்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மேஜர் லீக் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளன.


Click it and Unblock the Notifications
