லாகூர் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கையில் நடைபெறும் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டும், பாதி போட்டியுடன் கைவிடப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் நஜம் சேதி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற்று இருக்க வேண்டிய 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எவ்வாறு இலங்கைக்கு சென்றது என்பது குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
முன்னதாக 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை பாகிஸ்தானில் தான் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆசிய நாடும் ஒவ்வோர் முறையும் இந்த தொடரை நடத்த சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானிற்கு சென்று விளையாடாது என்பதால் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்துவதில் சிக்கல் உள்ளது. கடந்த முறை பாகிஸ்தானில் சில போட்டிகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் சில போட்டிகளுமாக தொடர் நடந்தது.
அதே போல, இந்த முறையும் பிசிசிஐ பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவித்தது. இதில் மற்றொரு முக்கிய விஷயம், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் தலைவர்.
அதனால், பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடப்பதே சந்தேகம் என்ற நிலையும் இருந்தது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த தொடர் நடைபெறும் என முடிவு எட்டப்பட்டது.
ஆனால், வேடிக்கையாக பாகிஸ்தான் அணி இலங்கையிலும், இலங்கை அணி பாகிஸ்தானிலும் தங்கள் குரூப் சுற்றில் விளையாடும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு காரணம், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றது தான்.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகள் மழையால் தடைபட்டு வருவது சர்ச்சையாகி இருக்கும் நிலையில் இதன் பின்னணியை போட்டு உடைத்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஜம் சேதி.
ஜெய் ஷா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் தான் பல்வேறு சந்திப்புகளில் மூன்று வகையான கருத்துக்களை முன் வைத்ததாக கூறி உள்ளார்.
"அனைத்து நாடுகளும் தற்போது பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடி வரும் நிலையில், முழு தொடரையும் பாகிஸ்தானில் நடத்துமாறு முதலில் கூறினேன். அதை மறுத்த உடன், ஐந்து போட்டிகளை பாகிஸ்தானிலும், எட்டு போட்டிகளை அமீரகத்திலும் நடத்துமாறு கூறினேன். அதையும் அவர்கள் மறுத்தார்கள். மேலும், தாங்கள் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தொடரை இலங்கைக்கு கொடுத்து விடுவோம் என்றார்கள்."
"இறுதியாக நாங்கள் பங்கேற்க மாட்டோம் என கூறிய பின், பாகிஸ்தானில் நான்கு போட்டிகளையும், இலங்கையில் மற்ற போட்டிகளையும் நடத்த முடிவு செய்தனர். நாங்கள் தொடர்ந்து இலங்கையில் மழை வரும் சாத்தியம் உள்ளது என்றும், அதன் காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் என்றும், அதனால் ரசிகர்கள் வரமாட்டார்கள் என்றும் கூறினோம்."
"மேலும், அமீரகத்தில் டிக்கெட் வருவாய் இலங்கையை விட பல மடங்கு அதிகமாக கிடைக்கும் என்றும் கூறினோம். ஜெய் ஷா அதை மறுத்த போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து உயர் அதிகாரி மும்பை சென்று, பிசிசிஐ உடன் பேசி போட்டிகளை அங்கே நடத்த முயற்சி செய்தார். பிசிசிஐ அதை மறுத்துவிட்டது. இப்போது அனைத்து காரணங்கள், கணிப்புகள் அனைத்தையும் விடுத்து, எங்களின் ஆலோசனையையும் மீறி ஏன் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன என்பதை ஜெய் ஷா தான் கூற வேண்டும்" என நஜம் சேதி கூறி இருக்கிறார்.
இந்த விவகாரம், பிசிசிஐ வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.