இந்திய வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பிடிவாதம்
மும்பை: உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசனில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் சாம்பியன்ஸ்' அணி பங்கேற்பதற்கான அனுமதியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தொடரின் முந்தைய சீசனில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரு போட்டிகளை 'இந்தியா சாம்பியன்ஸ்' அணி புறக்கணித்திருந்தது. இதனால், இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி பங்கேற்க மொஹ்சின் நக்வி தலைமையிலான வாரியம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியின் உரிமையாளர் கமீல் கான் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விடுத்த கோரிக்கையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது.

முந்தைய போட்டிகளைப் புறக்கணித்தமைக்காக இந்திய வீரர்கள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நிபந்தனைகளை WCL நிர்வாகம் நிராகரித்ததால், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வாரியம் மறுத்துவிட்டது.
இது குறித்து பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவையான தடையில்லா சான்றிதழை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதால், எங்களால் நடப்பு உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாரியத்தின் அதிகாரத்தையும் முடிவையும் நாங்கள் மதிக்கிறோம்.
அதே நேரத்தில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடரில் எங்கள் வீரர்கள் விளையாட முடியாதது ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிய சூழலில், யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டி ஆகியவற்றில் இருந்து விலகியது.
இதனால் அரையிறுதியில் விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஷாஹித் அப்ரிடி, சோயப் மாலிக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் அடங்கிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி, இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.மேலும், 2025 ஆசியக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கமாகக் கைகுலுக்கும் நடைமுறையை இந்திய வீரர்கள் தவிர்த்தனர். அது தற்போது வரை தொடர்கிறது.
இந்த சீசனில் அக்டோபர் 10 அன்று இரு அணிகளும் மீண்டும் மோதவிருந்த நிலையில், தற்போது அந்த போட்டி நடைபெறாது. இந்த லெஜண்ட்ஸ் தொடரை ஹர்ஷித் தோமர் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
" width="200" height="113">
