"வாய் திறக்கக் கூடாது".. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு வாய்ப்பூட்டு போட்ட கிரிக்கெட் வாரியம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் மீது எழுந்துள்ள ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ முகமது ரிஸ்வான் பேசக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பாதியிலேயே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட முகமது ரிஸ்வானிடம், பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு அமைப்பு (NCCIA) சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. மேலும் அவரது செல்போனைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை அவரது செல்போன் திருப்பித் தரப்படவில்லை.
உண்மையில் ரிஸ்வான் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் சரியாக விளையாடாதது மற்றும் அணியின் உள்விவகாரங்களில் அவர் நடந்து கொண்டது ஆகியவற்றை வைத்து அவரை பழி வாங்கவே பாகிஸ்தான் அமைச்சராகவும் இருக்கும் மோசின் நக்வி இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதை பற்றி விளக்கம் அளிக்கத்தான் ரிஸ்வான் முயல்கிறார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் மீதான அவதூறுகளுக்குப் பொதுவெளியில் விளக்கம் அளிக்கவும், ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தான் கடிதம் எழுதியதன் உண்மைப் பின்னணியை விவரிக்கவும் அனுமதி கேட்டு, முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் 2 முறை கோரிக்கை வைத்தார். வீரர்களின் மத்திய ஒப்பந்த விதி எண் 4.1-ன் படி அவர் இந்த அனுமதியைக் கோரினார்.
ஆனால், முகமது ரிஸ்வானின் இரண்டு கோரிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தலைமையிலான நிர்வாகம் கறாராக நிராகரித்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைக் குற்றம் சாட்டும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், உண்மை நிலையை மட்டுமே ரசிகர்களுக்கு விளக்க விரும்புவதாகவும் கூறியும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஏற்கனவே தன் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூர் நீதிமன்றத்தை நாடிய ரிஸ்வான் அதில் தோல்வி அடைந்தார். நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்கவில்லை. தற்போது ரிஸ்வான் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க அவரது வாயை அடைக்கும் வகையில், பாகிஸ்தான் வாரியமே வாய்ப்பூட்டு போட்டிருப்பது அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
