"கோலி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வாய் இருக்குன்னு பேசக்கூடாது" - கம்ரான் அக்மல் "விளாசல்"
இஸ்லாமாபாத்: கோலி மீதான கேப்டன்ஷிப் விமர்சனத்துக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்த தோல்விக்கு மிக அதிகமாக விமர்சிக்கப்படுவது கேப்டன் விராட் கோலி தான். அவரது கேப்டன்சி குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

அற்புதமான வீரர்
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எம்.எஸ்.தோனிக்கு பிறகு விராட் கோலி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன். அவர் 70 சதங்கள் அடித்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலகக் கோப்பை விளையாடியுள்ளார். நிச்சயமாக, இந்தியா தோற்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதில் அவரது தவறு என்ன? ஐந்து ஆண்டுகளாக இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக உள்ளது. இதுதான் அவரது சாதனை. அவரது கடமையை பாருங்கள்... அவரது கேப்டன்ஷிப் அற்புதமானது. இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், அவர் தன்னைத் தயாரித்துக் கொண்ட விதம் தனித்துவமானது.

குறை பேசுகிறார்கள்
ஒருவேளை இந்தியா தோற்ற போட்டிகளில், அவருக்கு பதில் வேறொருவரை கேப்டனாக நியமித்துவிட்டால், இந்திய அணி ஐ.சி.சி தொடரில் வெற்றிப் பெற்றுவிடும் என்று யாரும் எந்த உத்தரவாதம் அளிக்க முடியாது. இது அதிர்ஷ்டம் தொடர்பான ஒன்று. விரல்களை நீட்டி குற்றம் சாட்டுவது மிக எளிது. குறிப்பாக கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள், ஒரு Gully கிரிக்கெட் அணியைக் கூட வழிநடத்தாதவர்கள் இப்போது கோலி கேப்டன்சியை குறை கூறுகிறார்கள், கேப்டனை மாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள்.

ஆச்சர்ய சாதனை
இதுபோன்ற எந்தவொரு விஷயத்தாலும் அவர் பாதிக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மனதளவில் வலிமையானவர், ஒரு மிகப்பெரிய வீரர். யாரும் அவரது சாதனைகளை நெருங்க முடியாது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பல சதங்களை குவித்து, 50க்கு மேல் ஆவரேஜ் வைத்திருப்பது எல்லாம் ஆச்சர்யமான சாதனையாகும்" என்று நச்சென தனது கருத்துக்கள் கம்ரான் அக்மல் வெளிப்படுத்தி உள்ளார்.

ஸோ, நோ டென்ஷன்
இந்திய அணி அடுத்ததாக, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்வியை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஒருவேளை, இங்கிலாந்து தொடரில் தோற்றாலும், அடுத்து வரும் ஐபிஎல் தொடரில், அதனையும் மறந்துவிடுவார்கள். அவ்வளவு தாங்க கிரிக்கெட்!.


Click it and Unblock the Notifications