"ஜில்"லுன்னு போய்க் கொண்டிருந்த ஐபிஎல்லுக்கு ஷாக் கொடுத்த பெப்சி!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் பணத்தை வாரி வாரிக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டித் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து பெப்சி நிறுவனம் விலகி விட்டது. இதனால் வேறு விளம்பரதாரரை தேடியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள பெப்சி நிறுவனம் முடிவு செய்து அதை பிசிசிஐக்குத் தெரிவித்து விட்டது. எனவே அடுத்த ஆண்டு தொடரில் வேறு விளம்பரதாரரை பிசிசிஐ நியமிக்கவுள்ளது.
பிசிசிஐயுடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தைப் போட்டிருந்தது பெப்சிகோ நிறுவனம். இந்த ஒப்பந்தம் 2017ம் ஆண்டு முடிவடைவதாக இருந்தது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டுக்கு மரியாதை தரும் வகையில் ஐபிஎல் போட்டிகள் இல்லை என்பதால் ஒப்பந்தத்திலிருந்து விலகி விட பெப்சிகோ முடிவு செய்ததாம்.
ஆனால் மீசையில் மண் ஒட்டதாக கதையாக, பெப்சி நிறுவனத்திற்கு சர்வதேச சந்தையில் மார்க்கெட் குறைந்து விட்டதால்தான் அது விளம்பரதாரர் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

வேற யாராச்சும் இருக்காங்களாப்பா
தற்போது பெப்சி நிறுவனத்தின் இடத்தில் வேறு நிறுவனத்தை உட்கார வைக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனத்தை அது தேடி வருகிறதாம்.

அதெல்லாம் காரணம் இல்லை
இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், சொந்தக் காரணங்களுக்காகவே பெப்சிகோ நிறுவனம் விலகியுள்ளது. மற்றபடி கிரிக்கெட்டுக்கு மரியாதை இல்லை என்ற காரணம் எல்லாம் கிடையாது. இந்த ஆண்டுடன் அவர்கள் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கவலையே இல்லை
பெப்சிகோ போவதால் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களிடம் வங்கி உத்தரவாதம் உள்ளது. நாங்கள் நினைத்தால் அதை முடக்கி வைக்க முடியும். ஆனால் அதைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

அடுத்தவரிடம் கொடுப்போம்
அடுத்து வரும் மெயின் ஸ்பான்சரிடம் அந்த வங்கி உத்தரவாதத் தொகையை பெப்சிகோவிடமிருந்து மாற்றிக் கொடுக்க உதவி செய்வோம். இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், இது பெரிய விஷயமில்லை. மற்ற நிறுவனங்களிடம் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் மெயின் ஸ்பான்சரை முடிவு செய்வோம்.

ரொம்ப நன்றி
கடந்த காலங்களில் பெப்சியுடனான உறவு நன்றாகவே இருந்தது. அதை கெடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடக்கப் போவது அமைதியாக முடியட்டும் என்றார் சுக்லா.

ரூ. 396 கோடி
பெப்சி நிறுவனம், பிசிசிஐயுடன் ரூ. 396 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணம் கொடுத்துள்ளது. 2013 முதல் 2017 வரையிலான ஒப்பந்தமாகும் இது. ஆனால் 2013 போட்டித் தொடரின்போது நடந்த மேட்ச்பிக்ஸிங் உள்ளிட்டவை பெப்சியை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதாம். எனவேதான் அது விலகுவதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications