
ஸ்டேடியத்தில் நுழைந்த ஜார்வோ
லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, மைதானத்துக்குள் இவர் அத்துமீறி நுழைந்தார். பக்காவான ஒரு இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில், லோகோ, ஸ்பான்சர்ஸ் பெயர் என்று அனைத்தும் மிகச் சரியாக இருந்தது. ஜெர்ஸிக்கு பின்னால் ஒரு எண்ணும், அவரது பெயரும் (jarvo) இருந்தது. கிரிக்கெட்டே தெரியாதவர்கள் அவரைப் பார்த்தால், நிச்சயம் அவர் யாரோ ஒரு பிளேயர் என்றே நினைப்பார்கள். அப்படி பெர்ஃபெக்ட்டாக களத்திற்குள் நுழைந்தவர், ஏதோ அணி வீரரைப் போல சகஜமாக மற்ற வீரர்களுடன் ஏதேதோ பேச முயற்சி செய்தார். இந்திய வீரர்களும் ஒரு நொடி "யார்ரா இவன்" என்ற ஆச்சர்யப்பட்டு போனார்கள். நமக்கு தெரியாமல் ஒரு புது பிளேயரை பிசிசிஐ அனுப்பிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு மிக பெர்ஃபெக்ட்டாக இருந்தார் அந்த நபர்.

பாதித்த ஆட்டம்
உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, அவர் இந்திய அணியின் ஜெர்ஸியை காண்பித்து, அதிலிருந்த லோகோவை காண்பித்து, நானும் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போது செய்கை காண்பித்தார். எனினும், அந்த நபரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அவரை அப்படியே அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். அவர், இந்திய அணியின் ஸ்பான்சர்ஸ் பெயரை எல்லாம் அதிகாரிகளிடம் காட்டி விளக்க முயற்சித்ததை நினைத்து அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதன் பிறகு வீட்டிற்கு சென்ற அந்த நபர், தன் வீட்டில் இருந்து ஜெர்ஸியை கழட்டி வீடியோ எடுத்து, 'நான் தான் அந்த சேட்டைக்கு சொந்தக்காரன்' என்று சொல்லி வீடியோவும் வெளியிட்டார்.

மைதானத்தில் ரகளை
இந்நிலையில், இவர் தற்போது லீட்ஸின் ஹெட்டிங்லேவில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியிலும் தனது சேட்டையை தொடங்கியிருக்கிறார். இந்தமுறை பேட்ஸ்மேன் கோலியாக உருமாறி அவர் பேட்டிங் செய்ய களத்திற்குள் நுழைந்து இந்திய அணிக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறார். நேற்று ரோஹித் 59 ரன்களில் அவுட்டாகி சென்ற போது, கேப்டன் கோலி களமிறங்க தயாராகிக் கொண்டிருந்தார். அதே கேப்பில் மைதானத்திற்குள் பேட், கிளவுஸ், ஹெல்மெட் எல்லாம் அணிந்துகொண்டு ஒரு பேட்ஸ்மேன் போல நுழைந்துவிட்டார் ஜார்வோ. இதைப் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சியாக பின்னர் பாதுகாவலர்கள் வந்து அவரை வெளியே இழுத்துகொண்டு போனார்கள். ஹெல்மெட் அணிந்து, அதற்குள் ஒரு மாஸ்க்கும் அணிந்து வந்து ரகளை செய்துவிட்டார்.

நிறுத்துங்க ஜார்வோ
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ட்விட்டரில், "இன்றைய ஆட்டத்தில் ரோஹித், புஜாரா, கோஹ்லி மற்றும் ஜார்வோ ஆகியோர் தங்களது நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றினர். நன்றாக இருந்தது. தோழர்களே இந்த ஆட்டத்தை தொடர்ந்து இப்படியே வெளிப்படுத்துங்கள். ஜார்வோ இப்படி செய்வதை நிறுத்துங்கள்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை
இவரைப் போன்றவர்களைத் தான் 'Attention Seekers' என்று அழைப்பார்கள். அதாவது, மற்றவர்களின் கவனத்தை தன் மீது திருப்ப இதுபோன்ற கோமாளித்தனமான வேலையைச் செய்வார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதேசமயம், இது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய விஷயம் அல்ல. உள்ளே நுழைந்த அந்த நபர் கையில் ஆயுதம் வைத்திருந்தால்? ஒரு துப்பாக்கி வைத்திருந்தால்? நினைத்துப் பாருங்கள்.. இது போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு, இந்த கோமாளித்தன வேலைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications











