IPL 2024 : ஆரம்பிக்கலாமா.. சிஎஸ்கே சிங்கங்களே வருக.. முதல் நாளிலேயே ஆஜரான இளம் வீரர்கள்!
சென்னை : சிஎஸ்கே பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இளம் வீரர்கள் பலரும் சென்னைக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. இதனால் அனைத்து அணிகளும் அடுத்தடுத்த பயிற்சி முகாம், விளம்பர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச வீரர்களால் பயிற்சி முகாமில் விளையாட முடியாது என்று தெரிய வந்துள்ள நிலையில், உள்ளூர் வீரர்களை தயார் செய்யும் பணியை அணி நிர்வாகங்கள் வேகமாக தொடங்கியுள்ளன.

அந்த வகையில் முதல் அணியாக சிஎஸ்கே அணி பயிற்சி முகாமை இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் சிஎஸ்கே அணி தங்களது முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. வழக்கமாக அனுபவ வீரர்களை ஏலத்தில் வாங்கும் சிஎஸ்கே அணி, இம்முறை இளம் வீரர்களை அதிகளவில் வாங்கியுள்ளதால், அவர்களை பட்டை தீட்டும் பொறுப்பு அதிகமாகியுள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் சென்னையில் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய இளம் வீரர்களான தீபக் சஹர், முகேஷ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், பிரசாந்த் சொலங்கி உள்ளிட்டோர் வந்துள்ளனர். அவர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று முதலே பயிற்சியை தொடங்கவுள்ளனர். இதனை தொடர்ந்து ரஞ்சி டிராபி அரையிறுதியில் விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியுடன் இணைவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மார்ச் 5ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தோனி தனது மனைவியுடன் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கிறார். 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தோனி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அதற்குள் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் குழு பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications