மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ மும்முரமாக உள்ளது. இதனால் மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஷாருக் கான், பார்த் ஜிண்டால், காவ்யா மாறன், நெஸ் வாடியா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ரீடென்ஷன் எண்ணிக்கை, ஆர்டிஎம் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டன. ஒவ்வொரு தரப்பும் தங்களின் கருத்துகளை முன் வைத்த நிலையில், திடீரென கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் நிர்வாகிகள் இனி மெகா ஏலமே தேவையில்லை என்று கூறியது மற்ற அணிகளின் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் கேகேஆர் மற்றும் மும்பை அணியில் அதிகளவிலான இந்திய வீரர்கள் இருக்கின்றனர். ஒருவேளை 4 வீரர்களை தக்க வைக்கலாம் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுத்தாலும் சிக்கல் தான். ஏனென்றால் அந்த 6 வீரர்களில் 4 இந்திய வீரர்களை மட்டுமே ஒவ்வொரு அணியாலும் தக்க வைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு அணி நிர்வாகங்களும் அகாடமிகள் தொடங்கப்பட்டு முதலீடுகளை அதிகரித்துள்ளன. இதன் மூலமாக இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை சீனியர் லெவலுக்கு தயார் செய்து தங்களின் அணியில் கொண்டு வருகின்றன. அதன்பின் அந்த வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், அவர்களை மற்ற அணிகளுக்கு தாரை வார்ந்த கேகேஆர் போன்ற அணிகள் தயாராக இல்லை என்று தெரிய வருகிறது.
மும்பை அணியை பொறுத்தவரை இந்திய அணிக்காக விளையாடும் பாதி வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் தக்க வைக்க வேண்டும் என்றால், மெகா ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் எவ்வளவு ரிடென்ஷன் வாய்ப்பு கொடுத்தாலும், மும்பை அணிக்கு போதாது. இதன் காரணமாக இரு அணிகளும் எதிர்காலத்தில் மெகா ஏலம் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் டெல்லி, பஞ்சாப், ஆர்சிபி உள்ளிட்ட அணி நிர்வாகிகள் மெகா ஏலம் நிச்சயம் தேவை என்று வலியுறுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யமே மெகா ஏலத்தில் தான் இருக்கிறது என்றும், மெகா ஏலம் இருந்தால் தான் புதிய திறமைகளை அடையாளம் கண்டு அணிக்குள் கொண்டு வருவது உரிமையாளர்களின் சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.